இளைஞர்களுக்கு சக்தி ஊட்டுங்கள்: காங்., தலைவர் கார்கே அழைப்பு
இளைஞர்களுக்கு சக்தி ஊட்டுங்கள்: காங்., தலைவர் கார்கே அழைப்பு
ADDED : மார் 09, 2026 06:14 AM

கலபுரகி: ''இளைஞர்களுக்கு சக்தியூட்ட வேண்டும்,'' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விருப்பம் தெரிவித்தார்.
கலபுரகி, சித்தாபுராவில் நேற்று நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில், நேற்று அவர் பேசியதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிடம் சரண் அடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி. இவரது அடிமையை போன்று, நரேந்திர மோடி நடந்து கொள்கிறார். நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளார்.
காலை முதல் மாலை வரை, காங்கிரசை திட்டுவதையே மோடி வேலையாக வைத்துள்ளார். இது தவிர அவரால், வேறு எதையும் செய்ய முடியாது. இந்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் கட்டியது, சாலைகள், பள்ளிகளை உருவாக்கியது காங்கிரஸ்.
ஹிந்து மஹாசமுத்திரத்தில், ஈரான் கப்பலை அமெரிக்காவினர் எரித்தனர். இது பற்றி மோடி பேசவில்லை. இவருக்கு நாட்டை காப்பாற்றும் சக்தி, எந்த அளவுக்கு உள்ளது. பேசியும், மந்திரம் போட்டும் நாட்டை காப்பாற்ற முடியாது. இளைஞர்களுக்கு சக்தியூட்ட வேண்டும்.
நம் நாட்டின் மீது யாரா வது தாக்குதல் நடத்தினால், பணக்காரர்கள் வேறு நாட்டுக்கோ அல்லது தீவுக்கோ செல்வர். நாம் ஏழைகள் எங்கு செல்வது. இளைஞர்களுக்கு வேலை கிடைக் க வேண்டும்.
அமெரிக்காவுக்கு திமிர் ஏற்பட்டு உள்ளது. கமேனியை கொலை செய்தனர். அமெரிக்காவின் பக்கத்து நாட்டு அதிபரை இழுத்து சென்றனர். ஒரு நாட்டின் அதிபரை, அவரது நாட்டுக்குள் புகுந்து கொலை செய்தால், உலகம் பாதுகாப்பாக இருக்குமா.
காந்தி வகுத்த பாதையில் நடக்க வேண்டும். அதை விட்டு விட்டு அமெரிக்காவுடன் சேர்ந்து, இந்த நாட்டை பாழாக்குகிறார். நாம் யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை, நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ரஷ்யாவிடம், எண்ணெய் வாங்க, அமெரிக்கா நமக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கிறது என்றால், என்ன அர்த்தம்.
அமெரிக்காவின் அடக்கு முறைக்கு, இந்தியா பணிய கூடாது. நாங்கள் கே.கே,ஆர்.டி.பி., நிதியுதவியில், கலபுரகியில் விமான நிலையம் கட்டினோம். ஆனால் நான் இங்கு பயணிக்கிறேன் என்பதால், மத்திய அரசு விமான போக்குவரத்தையே நிறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
