/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'என்கவுன்டர்' வழக்கு தற்காலிக அறிக்கை
/
'என்கவுன்டர்' வழக்கு தற்காலிக அறிக்கை
ADDED : ஏப் 25, 2025 05:48 AM
பெங்களூரு: சிறுமி கொலை குற்றவாளி என்கவுன்டர் வழக்கில், தற்காலிக அறிக்கையை, மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
ஹூப்பள்ளி அசோக்நகரில் கடந்த 13ம் தேதி ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளியான பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரித்தேஷ் குமார், 35, என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இதில் சந்தேகம் இருப்பதாக கூறி, பி.யு.சி.எல்., எனும் கர்நாடகா மக்கள் சிவில் உரிமைகள் சங்கம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு, நேற்று தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் சஷிகரன் ஷெட்டி, ''இவ்வழக்கில் நேரமின்மை காரணமாக, தற்காலிக அறிக்கையை தாக்கல் செய்து உள்ளோம். நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நீதிபதிகள் கூறியதாவது:
இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, உயர் நீதிமன்ற கண்காணிப்பிலே விசாரணை நடக்கும். மனுதாரர் தரப்பு வக்கீல் ஆதித்ய சோந்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பங்கேற்றுள்ளதால், அவரின் வாதங்களை முன்வைக்க நேரம் வழங்கப்படும். விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

