/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு!': தங்கம் கடத்திய பணம் பரிமாறப்பட்டதாக 'திடுக்' புகார்
/
அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு!': தங்கம் கடத்திய பணம் பரிமாறப்பட்டதாக 'திடுக்' புகார்
அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு!': தங்கம் கடத்திய பணம் பரிமாறப்பட்டதாக 'திடுக்' புகார்
அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு!': தங்கம் கடத்திய பணம் பரிமாறப்பட்டதாக 'திடுக்' புகார்
ADDED : மே 21, 2025 11:08 PM

பெங்களூரு: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். நடிகை ரன்யா ராவ் கடத்தி விற்ற தங்கத்தின் பணம், கல்லுாரிகளுக்கு பரிமாறப்பட்டதாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'திடுக்' புகார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மூத்த தலைவரான பரமேஸ்வர், உள்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். சித்தார்த்தா என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்.
துமகூரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நெலமங்களா டி.பேகூரில் ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய மூன்று கல்லுாரிகள் உள்ளன.
தற்கொலை
பரமேஸ்வரின் மருத்துவ கல்லுாரியில், அதிக பணம் வாங்கி கொண்டு மருத்துவ படிப்புக்கு சீட் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த 2019ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரமேஸ்வரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின், அவர் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவணம் சிக்கியது
வருமான வரி அதிகாரிகள் கொடுத்த தொல்லையால், ரமேஷ் தற்கொலை செய்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியது.
பின், வருமான வரி அதிகாரிகள் விசாரணை அப்படியே நிறுத்தப்பட்டது.
தங்கள் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு, வருமான வரி அதிகாரிகள் தகவல் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை, பரமேஸ்வருக்கு சொந்தமான மூன்று கல்லுாரிகளுக்கும் 30க்கும் மேற்பட்ட, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
கல்லுாரிகளின் அலுவலக அறைகளுக்கு சென்று, அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதனால், மூன்று கல்லுாரி வளாகங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லுாரி நுழைவுவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடையாள அட்டை காண்பித்த பின்னரே மாணவர்கள், ஊழியர்கள் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
உண்மை வெல்லும்
இந்த சோதனை குறித்து, பெங்களூரு சதாசிவ நகரில் வசிக்கும் பரமேஸ்வரிடம் கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் சென்று விட்டார்.
முதல்வர் சித்தராமையாவும், 'இந்த சோதனை பற்றி எனக்கு தெரியவே தெரியாது' என்று கூறினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பரமேஸ்வர் கல்லுாரிகள் மீது, அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது என்று, காங்கிரஸ் தலைவர்கள் வழக்கம்போல, 'கோரஸ்' பாடினர்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தன் எக்ஸ் பதிவில், 'கர்நாடகாவின் மிகப்பெரிய தலித் தலைவர்களில் ஒருவரான பரமேஸ்வரின் கல்வி நிறுவனங்கள் மீது, தீங்கிழைக்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.
ஹொஸ்பேட்டில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு நில உரிமை பத்திரம் கிடைக்க, பரமேஸ்வர் முக்கிய பங்கு ஆற்றினார்.
'இதை, பா.ஜ.,வால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பா.ஜ., ஆட்சியில் செய்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் அரசு தீவிரமாக விசாரணை நடத்தும் நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சிக்க வைத்து, தங்கள் ஊழலை மறைக்க பா.ஜ., சூழ்ச்சி செய்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலை அடக்கும் முயற்சி இது. உண்மை எப்போதும் வெல்லும்' என்று பதிவிட்டு உள்ளார்.
ரன்யா ராவ்
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டியில், ''தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கும், பரமேஸ்வர் நடத்தி வரும் கல்லுாரிகளுக்கும் இடையில் பணபரிவர்த்தனை நடந்து இருப்பதாக, அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கலாம். அதன் அடிப்படையில் சோதனை நடத்தி இருக்கலாம்,'' என, கொளுத்தி போட்டார்.
தங்கம் கடத்திய வழக்கில் ரன்யாவை கைது செய்த பின், அவரது வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதில் சில ஆவணங்களில் பரமேஸ்வரின் கல்லுாரிகளுக்கு பண பரிமாற்றம் செய்தது பற்றிய தகவல் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஜெயமாலாவின் மகளை, ரன்யா ராவின் சகோதரர் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமண வரவேற்பின் போது சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களுடன், ரன்யா புகைப்படம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.