/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணம் செய்வதாக ஆசை காட்டி இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி
/
திருமணம் செய்வதாக ஆசை காட்டி இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக ஆசை காட்டி இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக ஆசை காட்டி இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 05, 2025 10:57 PM
ராமமூர்த்திநகர்: திருமணம் செய்வதாக கூறி, சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு பெண் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு, ராமமூர்த்திநகரில் வசிப்பவர் ரிஷி, 32. சாப்ட்வேர் இன்ஜினியர். தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இணையதளங்களின் மூலமாக பெண் தேடினார். தன்னை பற்றி விபரங்களை பதிவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் ரிஷியின் மொபைல் எண்ணுக்கு, ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண், தன் பெயர் ரோகிணி என்றும், ஆந்திராவின் விசாகப்பட்டினம் சொந்த ஊர் எனவும் கூறினார்.
'வெப்சைட்டில் உங்களை பற்றிய விபரங்களை பார்த்தேன். உங்களை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். தற்போது இங்கிலாந்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறேன்.
'ஆறு மாதங்களில் இந்தியா வருவேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கூறி இருக்கிறார்.
இதை நம்பிய ரிஷி, ரோகிணியிடம் அடிக்கடி மொபைல் போனில் பேசினார்.
'நான் வேலை செய்யும் வர்த்தக நிறுவனத்தில், பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும். திருமணத்திற்கு பின் வளமான வாழ்க்கை வாழலாம்' என்று ரிஷியிடம், ரோகிணி கூறி உள்ளார்.
இதனால் கடந்த பிப்ரவரி முதல் ஜூன் 18ம் தேதி வரை, ரோகிணி கூறிய பல வங்கிக்கணக்குகளுக்கு 80 லட்சம் ரூபாய் ரிஷி அனுப்பி வைத்தார்.
ஜூன் 19ம் தேதியில் இருந்து ரோகிணியை, ரிஷியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மொபைல் நம்பர் 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. அவரை பற்றி எந்த தகவலும் சேகரிக்க முடியவில்லை.
அப்போது தான் திருமணம் செய்வதாக கூறி, தன்னை ஏமாற்றி 80 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரிந்தது.
இதுகுறித்து கடந்த 3ம் தேதி, பெங்களூரு கிழக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
ரோகிணி மீது தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.