ADDED : ஜூலை 12, 2026 11:48 PM

- நமது நிருபர் -
தாவணகெரேயின் ஹரிஹரா தாலுகா நிட்டூரு கிராமத்தில் வசிப்பவர் சரோஜா நாகேந்திரப்பா பாட்டீல், 66. ராகி மால்ட், பாரம்பரிய தின்பண்டங்களை தயாரித்து, தத்வனம் என்ற பிராண்டில் விற்பனை செய்கிறார். இதன்மூலம் நிட்டூரு கிராமத்தின் முதல் பெண் தொழில் முனைவோர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.சரோஜா கூறியதாவது:
எனது சொந்த ஊர் ஷிவமொக்காவின் பத்ராவதி தாலுகா, அரப்லகே கிராமம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். குடும்ப சூழ்நிலையால் எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மேல் படிக்க முடியவில்லை. கடந்த, 1979ல் எனக்கும் நிட்டூர் கிராமத்தின் நாகேந்திரப்பா பாட்டீலுக்கும் திருமணம் நடந்தது.
முதலில் நாங்கள் கூட்டு குடும்பமாக இருந்தேன். பின், தனியாக வந்தோம். வாழ்க்கையை நடத்த என்ன செய்வது என்று யோசித்த போது தான், முதலில் மாட்டு பண்ணை ஆரம்பித்தேன். பால் கறந்து விற்பனை செய்தேன்.
பின், தேங்காய் நாரில் இருந்து கயிறு, மேட், பிரஷ்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை துவங்கினேன். ஆனால், மின் பற்றாக்குறை, சந்தைப்படுத்துதலில் ஏற்பட்ட சவால்களால் தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்பட்டது.
அதன் பிறகும் பல தொழில்களில் தோல்வி தான் கிடைத்தது. பின், விவசாயத்துறை நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றேன்.
மண்ணின் வளத்தை பாதுகாக்கும் இயற்கை விவசாய முறைகள், குறைந்த நீரில் நெல் விளைவிக்கும் தொழில்நுட்பத்தை கற்றேன். ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில் நெல், ராகி, பாக்கு, தேங்காய், காய்கறிகளை எனது நிலத்தில் பயிரிட ஆரம்பித்தேன்.
ராகி, அரிசி, தினையை பயன்படுத்தி ராகி மால்ட், தின்பண்டங்கள், சமையலுக்கு தேவைப்படும் மசாலாக்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கினேன். ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால், எனது பொருட்களை விளம்பரப்படுத்த சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.
தற்போது அந்த நிலை இல்லை.
தற்போது மாதம், 50,000 முதல், 75,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. எனது கிராமத்தில் வசிக்கும், 20 பெண்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு வழங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
