/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவில் இன்று 13வது இடத்தில் தோண்டும் பணி
/
தர்மஸ்தலாவில் இன்று 13வது இடத்தில் தோண்டும் பணி
ADDED : ஆக 06, 2025 08:34 AM

மங்களூரு : தர்மஸ்தலாவில் நேற்று இரண்டு இடங்களில் தோண்டியபோதும் மனித எலும்புகள் கிடைக்கவில்லை. இன்று 13வது இடத்தில் தோண்டும் பணிகள் நடக்க உள்ளன.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் கொலை செய்யப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக மஞ்சுநாதா கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் அளித்திருந்தார்.
சிறப்பு புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் 13 இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த மாதம் 29ம் தேதி முதல் இந்த இடங்களில் தோண்டும் பணிகள் நடக்கின்றன. ஆறாவது இடத்தில் 12 எலும்புக் கூடுகள், ஒரு மண்டை ஓடு கிடைத்தது.
நேற்று முன்தினம் 11வது இடத்துக்கு அருகில் 100க்கும் மேற்பட்ட எலும்புகள் கிடைத்தன. எலும்புகள் மணிப்பாலில் உள்ள கே.எம்.சி., மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளன. நேற்று ஏழாவது நாளாக தோண்டும் பணிகள், காலை 11:30 மணிக்கு துவங்கின. உஜிரே - தர்மஸ்தலாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள 11வது இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
இதில் 20 ஊழியர்கள், சிறிய பொக்லைன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆறு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மதியம் 2:00 மணிக்கு உணவு இடைவேளைக்காக அதிகாரிகள் சென்றனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு 12வது இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. மாலையில் வழக்கம் போல அதிகாரிகள் தோண்டும் பணியை நிறுத்திவிட்டுச் சென்றனர். இன்று 13வது இடம் தோண்டப்பட உள்ளது. இங்கு எலும்பு கூடுகள் கிடைக்குமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தர்மஸ்தலாவில் தன் மகள் தொலைந்து விட்டதாக புகார் அளித்திருந்த சுஜாதா பட்டின் வக்கீல் என்.மஞ்சுநாத் கூறியதாவது:
நேற்று முன்தினம் 11வது இடத்துக்கு அருகில் தோண்டும்போது, மூன்று எலும்புக்கூடுகள் கிடைத்தன. அதில் ஒன்று, ஒரு பெண்ணுடையதாக இருக்கும்.
ஏனெனில், அந்த இடத்தில் ஒரு சேலை துண்டும் இருந்தது. புகார்தாரர், ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோண்டுவது அர்த்தமற்றது. அவர் சொன்ன இடத்தின் அருகிலும் தோண்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மஸ்தலா வழக்கு எஸ்.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் முக்கிய முடிவுகளை அவர்களே எடுப்பர். இதில், மாநில அரசு தலையிடாது. எஸ்.ஐ.டி., தலைமை அதிகாரியிடம், தர்மஸ்தலா வழக்கு குறித்து எதுவும் பேசவில்லை. - பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்.
பச்சை துணியால் மறைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்ற தோண்டும் பணிகள்.