ADDED : ஜூன் 17, 2026 11:38 PM
மைசூரு; 'பார் அண்டு ரெஸ்டா ரென்டில்' ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, கடமை தவறிய கலால் துறையின் ஐந்து அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மைசூரு நகரின், தட்டஹள்ளி நான்காவது ஸ்டேஜ் அருகில், 'பாக்ஸ் டென் லிக்கர் கேரேஜ்' என்ற பெயரில், பார் அண்டு ரெஸ்டாரென்ட் உள்ளது. ஜூன் 15ம் தேதியன்று மதியம், ரெஸ்டாரென்ட் சமையலறையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்தது. இது, கட்டடம் முழுதும் வேகமாக பரவியது.
வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பலர் படுகாயமடைந்தனர். ரெஸ்டாரென்டில் பணியாற்றிய பிரகாஷ், 24, ஷாஹின், 26, உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தை, கலால் துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த ரெஸ்டாரென்டின் மாடியில், தென்னங்கீற்றுகள், வைக்கோல் பயன்படுத்தி மேற்கூரை அமைத்துள்ளனர்.
தீ வேகமாக பரவ, இதுவும் முக்கிய காரணமாக இருந்தது. கீற்று பயன்படுத்தி, 'ரூப் டாப்' அமைப்பது குறித்து அனுமதி பெறவில்லை. இதை ஆய்வு செய்யாமல், கலால் துறை அதிகாரிகள் கடமை தவறினர்.
எனவே கலால் துறை ஆய்வாளர், ஏட்டு உட்பட, ஐந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, கலால் துறை கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.
