/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
36 லட்சம் மலர்களுடன் கண்காட்சி லால்பாக் பூங்காவில் நாளை துவக்கம்
/
36 லட்சம் மலர்களுடன் கண்காட்சி லால்பாக் பூங்காவில் நாளை துவக்கம்
36 லட்சம் மலர்களுடன் கண்காட்சி லால்பாக் பூங்காவில் நாளை துவக்கம்
36 லட்சம் மலர்களுடன் கண்காட்சி லால்பாக் பூங்காவில் நாளை துவக்கம்
ADDED : ஆக 06, 2025 08:35 AM
பெங்களூரு: சுதந்திர தினத்தை ஒட்டி, லால்பாக் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 218வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது.
கர்நாடக தோட்டக்கலை துறை சார்பில், ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திரதினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த வகையில், சுதந்திரதினத்தை ஒட்டி, 218வது மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா நாளை துவக்கி வைக்கிறார். வரும் 18ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.
இது குறித்து, தோட்டக்கலை துறை இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் ஜெகதீஷ் ஆகியோர், லால்பாக் பூங்காவில் நேற்று அளித்த பேட்டி:
சுதந்திர போராட்ட வீரர்கள் கித்துார் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா ஆகியோரை மையப்படுத்தி, இம்முறை மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 36.50 லட்சம் மலர்கள் கண்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. கண்ணாடி மாளிகையின் மையப்பகுதியில் 18 அடி உயரம் மற்றும் 32 அடி அகலம் கொண்ட கித்துார் கோட்டை, ராணி சென்னம்மா மண்டபம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களுடன் நடந்த போரின் போது நடந்த காட்சி படங்கள், 60 பலகைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
திரும்பும் இடமெல்லாம் வித்தியாசமான வடிவமைப்புகளில் மலர்கள் அலங்கரித்து வைக்கப் பட்டுள்ளன.
கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 2 கோடி ரூபாய் செலவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பார்வையாளர்களை கவரும் வகையில், போன்சாய் தோட்டமும் இடம்பெறும். இம்முறை, 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவர் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிக்கெட் எவ்வளவு?
பெரியோருக்கு வார நாட்களில் 80 ரூபாயும், வார இறுதி நாட்களில் 100 ரூபாயும்; 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனைத்து நாட்களிலும் 30 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவசம்.