/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் நகருக்குள் 'எக்ஸ்பிரஸ் பஸ்' ஈஷா பவுண்டேஷனுக்கு 'ஆன்மிக சுற்றுலா'
/
பெங்களூரில் நகருக்குள் 'எக்ஸ்பிரஸ் பஸ்' ஈஷா பவுண்டேஷனுக்கு 'ஆன்மிக சுற்றுலா'
பெங்களூரில் நகருக்குள் 'எக்ஸ்பிரஸ் பஸ்' ஈஷா பவுண்டேஷனுக்கு 'ஆன்மிக சுற்றுலா'
பெங்களூரில் நகருக்குள் 'எக்ஸ்பிரஸ் பஸ்' ஈஷா பவுண்டேஷனுக்கு 'ஆன்மிக சுற்றுலா'
ADDED : ஜூன் 20, 2025 11:17 PM

பெங்களூரு: பெங்களூரு மக்களுக்கு இரண்டு இனிப்பான செய்தியை பி.எம்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் பி.எம்.டி.சி., விரைவு பஸ் சேவையையும், ஈஷா பவுண்டேஷனுடன் இணைந்து ஒரு நாள் சுற்றுலா பாக்கேஜையும் துவக்கி உள்ளது.
பெங்களூரு சாந்தி நகர் பஸ் நிலையத்தில் உள்ள பி.எம்.டி.சி., தலைமை அலுவலகத்தில், நேற்று 'விரைவு பஸ் சேவை', 'பெங்களூரு - ஈஷா பவுண்டேஷன்' ஆன்மிக சுற்றுலா பாக்கேஜை, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
பஸ்சில் பயணம் செய்வதால், தங்கள் நேரம் வீணாவதாக பயணியர் வருத்தப்பட்டு வந்தனர். ஆனால் இன்று முதல் அந்த வருத்தம் தேவையில்லை. ஏனெனில், பெங்களூரு நகருக்குள் 'விரைவு பஸ்' போக்குவரத்தை, அதே கட்டணத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடில்லி, மும்பையை அடுத்து, பெங்களூரில் தான் இத்தகைய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து அத்திபள்ளிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் 10 பஸ்கள்
பனசங்கரியில் இருந்து அத்திபள்ளிக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் 10 பஸ்கள்
மெஜஸ்டிக்கில் இருந்து தேவனஹள்ளிக்கு 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம், 10 பஸ்கள்
பனசங்கரியில் இருந்து ஹாரோஹள்ளிக்கு 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம், 8 பஸ்கள்
மெஜஸ்டிக்கில் இருந்து - நெலமங்களாவுக்கு 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம், 10 பஸ்கள் இயக்கப்படும்.
இந்த பஸ்கள், மூன்று நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். இதற்கு மாதாந்திர பஸ் பாஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆன்மிக சுற்றுலா
இதுபோன்று, பயணியர் இடையே ஆன்மிக சுற்றுலாவுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
வாரத்தின் இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் ஈஷா பவுண்டேஷனுடன், பி.எம்.டி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் பயணிக்க பி.எம்.டி.சி.,யின் www.mybmtc.karnataka.gov.in அல்லது கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் www.ksrtc.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
இந்நாட்களில், பெங்களூரு கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் பஸ், காளி ஆஞ்சநேயா சுவாமி கோவில், ஸ்ரீ கட்டி சுப்பிரமண்ய சுவாமி கோவில், முத்தேனஹள்ளி ஞானதீர்த்த லிங்கம், ஈஷா பவுண்டேஷன் சென்றடையும். இரவு 7:00 மணிக்கு மீண்டும் கெம்பே கவுடா பஸ் நிலையத்துக்கு வந்தடையும். ஒருவருக்கு 600 ரூபாய் கட்டணம்.
* பனசங்கரி பஸ் நிலையத்தில் இருந்து காலை 11:00 மணிக்கு புறப்பட்டு போக நந்தீஸ்வரர் கோவில், கனவே பசவண்ணர் கோவில், சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம், சமாதி முத்தேனஹள்ளி, ரங்கஸ்தலா ரங்கநாத சுவாமி கோவில், ஈஷா பவுண்டேனுக்கு சென்றடையும். இரவு 10:00 மணிக்கு மீண்டும் பனசங்கரி பஸ் நிலையம் வந்தடையும். ஒருவருக்கு 700 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.
சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து காலை 11:00 மணிக்கு புறப்படும் பஸ், போக நந்தீஸ்வரர் கோவில், கனவே பசவண்ணர் கோவில், சர் எம்.விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம், சமாதி முத்தேனஹள்ளி, ரங்கஸ்தலா ரங்கநாத சுவாமி கோவில், ஈஷா பவுண்டேனுக்கு சென்றடையும். இரவு 10:10 மணிக்கு மீண்டும் சென்ட்ரல் சில்க் போர்டு வந்தடையும். ஒருவருக்கு 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.