/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி., பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்
/
பி.எம்.டி.சி., பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்
ADDED : ஜன 27, 2026 04:55 AM

காடுகோடி: பெங்களூரில், பி.எம்.டி.சி., பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், பஸ்சின் பின்பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது. பஸ்சில் பயணியர் இல்லாததால் உயிர்சேதம் இல்லை.
பெங்களூரு சதரமங்களாவில் பி.எம்.டி.சி., பணிமனை உள்ளது. இந்த பணிமனையை ஒட்டி, ரயில் தண்டவாளம் செல்கிறது. நேற்று காலை, 9:15 மணிக்கு பணிமனையில் இருந்து காடுகோடி செல்ல, பி.எம்.டி.சி., பஸ் வெளியே வந்தது.
அப்போது டிரைவர், பஸ்சை ரிவர்ஸ் எடுக்க முயன்றதால், தண்டவாள பகுதிக்கு பஸ்சின் பின்பக்க பகுதி சென்றது. இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - டாடாநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின், பஸ்சின் பின்பக்கம் மோதியது. இதில், பஸ்சின் பின்பகுதி சேதமடைந்தது.
சிறிது துாரம் சென்று ரயிலும் நின்றது. பஸ் மீது மோதியதால் ரயில் இன்ஜினும் சேதம் அடைந்தது. பஸ்சில் பயணியர் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'சதரமங்களா பி.எம்.டி.சி., பணிமனையை ஒட்டியுள்ள, ரயில் தண்டவாள பகுதியில் வேலை நடக்கிறது. இதனால், சாலை மிகவும் குறுகலாகி உள்ளது. பஸ்சை திரும்ப முடியாததால், டிரைவர் ரிவர்ஸ் எடுக்க முயன்றார். அப்போது வந்த ரயில், பஸ் மீது மோதி விட்டது' என்றனர்.

