ADDED : ஜன 15, 2026 07:11 AM

பொதுவாக எந்த நல்ல விஷயங்களையும் செய்வதற்கு நேரம், காலம் பார்த்து செய்வது உண்டு. அதிலும் கைக்கடிகாரம் அணிவது நேரத்தை எளிதாக பார்ப்பது; நேர நிர்வாகத்தை கடைபிடிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருவரின் ஆளுமையை கூட அவர் அணிந்திருக்கும், கைக்கடிகாரம் காட்டி விடும். இப்படிபட்ட கைக்கடிகாரத்திற்கு என்று தனியாக அருங்காட்சியகமே உள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
பெங்களூரின் ஜாலஹள்ளியில் உள்ள எச்.எம்.டி., எஸ்டேட், எச்.எம்.டி., காலனியில், எச்.எம்.டி., பாரம்பரிய மையம் மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. எச்.எம்.டி., என்பதன் முழு விரிவாக்கம், 'ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்' நிறுவனம் ஆகும். கடந்த 1953 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவன கட்டடத்தில், பழங்கால கைக்கடிகாரங்கள், சுவரில் பொருத்தப்படும் கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
கடிகாரங்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி அனைத்து குறிப்புகளும் உள்ளன.
கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள, 'ஆடியோ விஷுவல்' அறைக்கு சென்றால், எச்.எம்.டி., உருவான வரலாறு, கடிகாரங்கள் பற்றி 10 நிமிடங்கள் ஓடும் குறும்படம் வெளியிடப்படுகிறது.
கட்டடத்தில் உள்ள அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள, கடிகாரங்களை பார்த்து விட்டு வெளியே வந்தால், எச்.எம்.டி., கடை உள்ளது. இங்கு 500 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரையிலான, கைக்கடிகாரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பெண்கள் விரும்பும் மாடலில் கைக்கடிகாரங்களும் இங்குகிடைக்கின்றன.
எச்.எம்.டி., வளாகம் நான்கு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. பச்சை, பசலேன காட்சி அளிக்கும் வளாகம், பழமையான அறைகளை காண டிராக்டர் சவாரி செய்யலாம். மாணவர்களுக்கு 15 ரூபாயும்; மற்றவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அருங்காட்சியத்தை சுற்றி பார்க்க பெரியவர்களுக்கு 30 ரூபாயும்; ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம். இருசக்கர வாகனங்கள் நிறுத்த 10 ரூபாயும்; நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் கட்டணம்; வாட்ச் வாங்கி வந்தால் அதற்குரிய சிலிப்பை காண்பித்தால், வாகன கட்டணம் இல்லை.
தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை அருங்காட்சியகம் திறந்து இருக்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையும், தேசிய விடுமுறை நாட்களிலும் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருக்கும். குழந்தைகள் நேரத்தை போக்க, விளையாட்டு உபகரணங்களும் உள்ளன.
தொடர்புக்கு: 080 - 28383382
எப்படி செல்வது?
மெஜஸ்டிக்கில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் ஜாலஹள்ளி கிராஸ் செல்லும் 273சி பஸ்சில் செல்ல வேண்டும். கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் இருந்து செல்வோர் 271எப் பஸ்சில் செல்ல வேண்டும்
-- நமது நிருபர் --.

