போலி மருந்து 'மாபியா'க்கள் அமைச்சர் காதர் கடும் கோபம்
போலி மருந்து 'மாபியா'க்கள் அமைச்சர் காதர் கடும் கோபம்
ADDED : செப் 16, 2026 12:45 AM

பெங்களூரு: ''போலி மருந்துகளை விற்பனை செய்து மக்களின் உயிரோடு போதை பொருள் மாபியாக்கள் விளையாடுகின்றனர். இது கொலை, கொலை முயற்சிக்கு சமமானதாகும்,'' என சுகாதார துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தற்போதுள்ள விதிகள்படி, போலி மருந்து விற்பனையாளர்களின் உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது சிறிய அபராதம் அல்லது மிதமான தண்டனை விதிக்கலாம்.
ஆனால், கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக்கும் இத்தகைய மோசடிக்காரர்களுக்கு அபராதம் செலுத்துவது பெரிய விஷயமல்ல.
ஒரு மாநிலத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தங்கள் மனைவி, தந்தை அல்லது சகோதரர் பெயரில் மீண்டும் அதே தொழிலை துவங்குகின்றனர்.
சாமானிய மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இந்த கும்பலுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை அல்லது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய, மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற கோரி, மத்திய அமை ச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
பிற மாநிலங்களில் இருந்து போலி மருந்துகள், மாநிலத்திற்குள் நுழைவதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையேயான நெட்ஒர்க்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய மருந்து பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு களமிறக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக அரசு முதன் முறையாக இந்த மோசடியை கண்டறிந்து உள்ளது. போலி மற்றும் தவறான முத்திரையிடப்பட்ட மருந்துகள், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, கர்நாடகா உட்பட நாட்டின் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போலி மருந்துகளை, மாநில அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வழக்கில் விரிவான விசாரணை நடத்த, போலீஸ், உள்துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, வணிக துறை அதிகாரிகளை கொண்ட எஸ்.ஐ.டி., குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
