ADDED : மார் 01, 2026 05:14 AM
பெலகாவி: தனியார் நிதி நிறுவனத்தின் செயலால், குடும்பமே வீதிக்கு வந்துள்ளது. ஐந்து மாத பச்சிளம் குழந்தையுடன், குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகா அலகநுாரா கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்த பாட்டீல். இவரது தந்தை ஸ்ரீகாந்த் பாட்டீலின் இதய அறுவை சிகிச்சைக்காக, வீட்டை அடமானம் வைத்து, 'இக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்' என்ற நிறுவனத்திடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினர்.
கடந்தாண்டு ஸ்ரீகாந்த் பாட்டீல் காலமானார். அதன்பின், ஹனுமந்த பாட்டீலுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், ஏழு மாதங்களாக கடன் தவணையை செலுத்த முடியவில்லை.
ஏழு லட்சம் ரூபாய் பாக்கி இருந்ததால், நேற்று முன்தினம் கிராமத்துக்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், ஹனுமந்த பாட்டீல் குடும்பத்தினரை வீட்டில் இருந்து வெளியேற்றி, வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
ஹனுமந்தாவின் மனைவிக்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது. குழந்தை உட்பட மொத்த குடும்பமும் இரவு முழுதும் வீதியில் இருந்தது. வீட்டில் உள்ள பாத்திரங்கள், போர்வை உட்பட, எந்த பொருட்களையும் எடுத்து கொள்ள நிதி நிறுவனத்தினர் அனுமதிக்கவில்லை. கடனை செலுத்த அவகாசம் அளிக்கும்படி, குடும்பத்தினர் மன்றாடுகின்றனர்.
