66 பைசாவை திருப்பி கேட்டு வங்கியில் விவசாயி வாக்குவாதம்
66 பைசாவை திருப்பி கேட்டு வங்கியில் விவசாயி வாக்குவாதம்
ADDED : மார் 02, 2026 05:27 AM
ஹாசன்: வங்கியில், 66 பைசாவை திருப்பி கேட்டு, விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில் வசிப்பவர் விவசாயி சொக்கண்ண கவுடா. இவர் கனரா வங்கியில் பயிர்க்கடன் பெற்றிருந்தார். கடன் தவணையை ஒழுங்காக கட்டியுள்ளார். அவருக்கு மேலும் கடன் தேவைப்பட்டதால், வங்கியில் விண்ணப்பித்திருந்தார்.
நேற்று முன்தினம், அவருக்கு போன் செய்த வங்கி ஊழியர், 'நீங்கள் வாங்கிய பழைய கடனில், 9.34 ரூபாய் பாக்கி உள்ளது. அதை அடைக்கும் வரை, புதிய கடன் வழங்க முடியாது' என,கூறினார்.
இதை கேட்டு கடுப்படைந்த விவசாயி சொக்கண்ண கவுடா, வங்கிக்கு சென்று 10 ரூபாய் கொடுத்தார். 'கடன் பாக்கியை எடுத்து கொண்டு மிச்சம் 66 பைசாவை திருப்பி தாருங்கள்' என, பிடிவாதம் பிடித்தார்.
மேலும், 'ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, ஊரை விட்டு ஓடியவர்களை பற்றி, வங்கி அதிகாரிகள் சிந்திப்பது இல்லை. கடனை ஒழுங்காக அடைக்கும் விவசாயிக்கு தொல்லை தருகின்றனர்.
வங்கி ஊழியர் 9.34 ரூபாய் கடன் பாக்கியை கேட்டு, நெருக்கடி கொடுக்கிறார். நீங்கள் இவ்வளவு கணக்கு பார்க்கும் போது, நானும் கூட அப்படியே பார்ப்பேன். எனக்கு 66 பைசாவை திருப்பி தாருங்கள்' என, முரண்டு பிடித்தார்.
இதனால், தர்ம சங்கடத்துக்கு ஆளான வங்கி ஊழியர்கள், விவசாயியை சமாதானம் செய்து அனுப்பினர்.
