/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழையில் வாழைகள் நாசம் மயங்கி விழுந்த விவசாயி
/
மழையில் வாழைகள் நாசம் மயங்கி விழுந்த விவசாயி
ADDED : மே 15, 2025 11:13 PM
கலபுரகி: இரவு முழுதும் பெய்த மழை, விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்தை துவம்சம் செய்தது. காலையில் இதை பார்த்த அவர், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
கலபுரகி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. பல்வேறு கிராமங்களில் விடிய, விடிய மழை பெய்ததால், வயல், தோட்டங்களில் நெல், வாழை, காய்கறிகள் உட்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தன.
நந்தநுார் கிராமத்தில் வசிக்கும் கிஷோர் ராத்தோட், தன் வயலில் வாழை பயிரிட்டிருந்தார். இவரது குடும்பத்தினர் ஓராண்டாக, வாழைக்கன்றுகளை பராமரித்தனர். உரிய வேளையில் உரம் போட்டனர். பூச்சி கொல்லி மருந்து தெளித்தனர்; தண்ணீர் பாய்ச்சினர்.
இவர்கள் உழைப்பின் பயனாக, வாழைகள் செழித்து வளர்ந்தன. அனைத்து மரங்களிலும் வாழைக்குலை தள்ளி இருந்தது.
இன்னும் சில நாட்களில் அறுவடை செய்து, மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்தனர்; அதிக லாபம் கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்.
கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, கன மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இதில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
நேற்று காலையில் தோட்டத்தை பார்க்க வந்த விவசாயி கிஷோர் ராத்தோட், தோட்டமே பாழாகி, வாழைக்குலைகள் மண்ணில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.