மக்கள் தொடர்பு கூட்டத்தில் ஆங்கிலத்தில் அசத்திய விவசாயி
மக்கள் தொடர்பு கூட்டத்தில் ஆங்கிலத்தில் அசத்திய விவசாயி
ADDED : மே 15, 2026 03:36 AM
துமகூரு: மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில், வயதான விவசாயி ஒருவர், ஆங்கில மொழியில் சரளமாக பேசி, பிரச்னையை விவரித்ததை கண்டு, எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு ஆச்சரியம் அடைந்தார்.
துமகூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி தாலுகாவில், தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு, தாசில்தார் மமதா தலைமையில், மக்கள் தொடர்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல கிராமங்களின் விவசாயிகளும் பங்கேற்று, தங்களின் பிரச்னைகளை விவரித்தனர்.
அதே போல, அரளிகெரே கிராமத்தின் விவசாயி கிரியப்பா, 70, என்பவரும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். இவர் கெரேகோடி ரங்காபுரா மடத்தில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
ஆனால் இவருக்கு ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் நல்ல புலமை உள்ளது. இந்த மொழிகளில் தடையின்றி சரளமாக பேசுவார். பல நேரங்களில், இதை கண்டு தாசில்தார் மமதா ஆச்சரியம் அடைந்துள்ளார்.
விவசாயி கிரியப்பா, தன் நிலத்துக்கு செல்ல மரங்கள் இடையூறாக உள்ளன. இவற்றை அகற்றி, வழி ஏற்படுத்தி தரும் படி வேண்டுகோள் விடுக்க, நேற்றைய கூட்டத்துக்கு வந்திருந்தார்.
அவர், எம்.எல்.ஏ., சுரேஷ்பாபுவிடம் பேச முற்பட்ட போது, தாசில்தார் மமதா ஆங்கிலத்தில் விவரிக்கும்படி கூறினார்.
விவசாயியும், 'ஆங்கிலத்தில் கூறினால் மட்டும், பிரச்னை தீர்ந்து விடுமா' என, முணுமுணுத்தபடியே சரளமான ஆங்கிலத்தில் பிரச்னையை விவரித்தார். இதை கேட்டு எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு ஆச்சரியம் அடைந்தார்.
மரங்களை விரைவில் அகற்றி, வழி ஏற்படுத்தி தருவதாக விவசாயி கிரியப்பாவுக்கு உறுதி அளித்தார். கிரியப்பா ஆங்கிலத்தில் பேசும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
இவரை பாராட்டிய பலரும், ' நமது விவசாயிகள், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. கல்வி என்பது யாருடைய சொத்தும் அல்ல என்பதற்கு, இதுவே சிறந்த உதாரணம். இனியாவது விவசாயிகளை அலட்சியமாக பார்க்க கூடாது' என, அறிவுறுத்துகின்றனர்.
