/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
449 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க விவசாயிகள்... ஒப்புதல்! ஏக்கருக்கு ரூ.3.50 கோடி கேட்பதால் அரசு அதிர்ச்சி
/
449 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க விவசாயிகள்... ஒப்புதல்! ஏக்கருக்கு ரூ.3.50 கோடி கேட்பதால் அரசு அதிர்ச்சி
449 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க விவசாயிகள்... ஒப்புதல்! ஏக்கருக்கு ரூ.3.50 கோடி கேட்பதால் அரசு அதிர்ச்சி
449 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்க விவசாயிகள்... ஒப்புதல்! ஏக்கருக்கு ரூ.3.50 கோடி கேட்பதால் அரசு அதிர்ச்சி
ADDED : ஜூலை 14, 2025 04:57 AM

கே.ஐ.டி.பி.ஏ., எனும் பெங்களூரு தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'விண்வெளி மற்றும் தொழில்நுட்ப பூங்காவுக்காக, பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியின் சன்னராயப்பட்டணா ஊராட்சிக்கு உட்பட்ட 13 கிராமங்களில் உள்ள 1,777 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும்' என்று அரசு அறிவித்திருந்தது.
1,000 நாட்கள்
நிலங்களை கையகப்படுத்தினால், இதை நம்பி உள்ள 800 குடும்பத்தினர் பாதிக்கப்படுவர். எனவே, இந்த அறிவிப்பை வாபஸ் பெற கோரி, 2022 ஜனவரியில் விவசாயிகள் துவக்கிய போராட்டம், ஆயிரம் நாட்களை தாண்டி நடந்து வருகிறது.
போராட்டம் தீவிரம் அடைவதை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, ஜூலை 4ல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அன்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாததால், பத்து நாட்களில் முடிவு அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் சித்தரமையாவை காவேரி இல்லத்தில், தேவனஹள்ளி விவசாய சங்க பிரதிநிதிகள், நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
ஒப்புதல்
அப்போது விவசாயிகள், 'விண்வெளி பாதுகாப்பு பூங்காவுக்கு கையகப்படுத்தப்படும் ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா, 3.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; நிலம் கொடுக்கும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, அவர்களின் கல்விக்கு ஏற்ப அரசு வேலை தர வேண்டும்.
'விண்வெளி பாதுகாப்பு பூங்கா அமைய உள்ள இடத்தை எக்காரணம் கொண்டும், பசுமை மண்டலமாக மாற்றக்கூடாது; கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அருகில் உள்ள நிலங்களை மஞ்சள் மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்று நான்கு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தனர். இதற்கு அரசு ஒப்புக் கொண்டால், நிலம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கையகப்படுத்துவதற்கு எதிராக ஒரு விவசாய சங்கத்தினரும், 449 ஏக்கர் நிலம் வழங்க தயாராக உள்ளதாக மற்றொரு விவசாய சங்கமும் கூறி உள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரசுக்கு கடிதம்
அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர் கார்கே, ராஜ்யசபா எம்.பி., சோனியா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
கார்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 65 பேர் சார்பில் கர்நாடக வேளாண் விளைபொருள் விலை ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் பிரகாஷ் கம்மரடி கையெழுத்திட்டு உள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக, 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் உண்மையான போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள், தலித், பெண்கள், இளைஞர் அமைப்புகள் ஆதரவு அளித்து உள்ளன.
விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதில் இருந்து பின் வாங்குவதாக உறுதி அளித்த மாநில அரசு, இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் காங்கிரஸ் உயர்மட்ட குழு தலையிட வேண்டும்.
கடந்த 2022ல் கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 80 சதவீத விவசாயிகள், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நிலத்தை இழக்கும் விவசாயிகளில், 163 பேர் எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களை சேர்ந்தவர்கள். அரசால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறுவது, சமூக நீதி மற்றும் அரசியல் அமைப்பு உரிமைகளை மீறுவதாகும்.
மாநிலத்தில் ஏராளமான மாற்று நிலங்கள் உள்ளன. ஆனாலும், வளமான நிலத்தை கையகப்படுத்துவது சரியல்ல. சி.ஏ.ஜி., எனும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையிலும் கூட, கே.ஐ.ஏ.டி.பி., நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படை தன்மை இல்லாதது, சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாதது உட்பட பல விதிகள் மீறப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டு உள்ளது. எனவே, நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகையை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
15ல் அறிவிப்பு?
பெங்களூரு சதாசிவா நகரில், மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று கூறியதாவது:
தேவனஹள்ளியை சுற்றி உள்ள பகுதியில் விவசாயம் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. எனவே, அதை நிரந்தர விவசாய மண்டலமாக மாற்றுவது குறித்தும் அரசு யோசித்து வருகிறது. திடீரென இப்போது சிலர் வேண்டாம் என்கின்றனர். இத்தகைய இரட்டை வேடம் சரியல்ல.
தேவனஹள்ளி சன்னராயபட்டணாவில் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முதல்வர் சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார். விவசாயம், தொழில் இரண்டையும் ஒன்றாக மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
அங்குள்ள சிலர், 449 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புக் கொண்டு, ஏக்கருக்கு 3.50 கோடி ரூபாய் கேட்கின்றனர். இது விவசாயிகள் இடையே மாறுபட்ட கருத்தாக உள்ளது. அரசு அனைத்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து வருகிறது.
தேவனஹள்ளியை சுற்றி எவ்வளவு நிலங்களை எந்தெந்த கட்டுமான நிறுவனங்கள் வாங்கி உள்ளன; யாருடன் ஒப்பந்தம் செய்துள்ளன; ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் எவ்வளவு நிலம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.