ADDED : மே 13, 2026 03:16 AM

பெலகாவி: தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க ஏரிகள், ஆறுகளை உடனடியாக துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெலகாவி மாவட்டத்தில் 1,132 ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஏரிகள் வற்றிப்போகும் சூழ்நிலையில் உள்ளன. மேலும், மாவட்டத்தில் பாயும் கிருஷ்ணா, கடபிரா, துதகங்கா, வேதகங்கா போன்ற ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சிக்கபாகேவாடி கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகள் முற்றிலுமாக வற்றிவிட்டன.
இதனால், உள்ளூர் மக்கள், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
இது குறித்து, மாவட்ட விவசாய சங்கத்தினர் கூறியதாவது:
பெலகாவியில் உள்ள 134 ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஏரிகள், ஆறுகளை நம்பியே விவசாயம் செய்கிறோம்.
தற்போது, பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிவிட்டன. நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தோம்.
இருப்பினும், மண் அகற்றப்படவில்லை. நீர்நிலைகள் துார்வாரப்படாததாலேயே வறண்டு போகும் சூழல் உள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை தடுக்க, உடனடியாக நீர்நிலைகள் அனைத்தும் துார்வாரப்பட வேண்டும்.
இதை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
