17 வயது மகள் ஆணவ கொலை தலைமறைவாக இருந்த தந்தை கைது
17 வயது மகள் ஆணவ கொலை தலைமறைவாக இருந்த தந்தை கைது
ADDED : மே 17, 2026 11:27 PM

துமகூரு: தன் விருப்பத்துக்கு மாறாக, உறவினரை காதலித்த மகளை தந்தையே கொன்று புதைத்து, நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், நிம்பேமரதஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் திம்மராயப்பா, 48. இவருக்கு மனைவியும், மேக்னா, 17, என்ற மகளும் இருந்தனர். மேக்னா பி.யு.சி., படித்து வந்தார்.
தகராறு தன் தாய்வழி உறவினர் ஒருவரை, மேக்னா காதலித்தார். மகள் காதலித்தவரை திருமணம் செய்து வைக்க, தாயும் விரும்பினார். இது தொடர்பாக பேச்சும் நடந்தது.
ஆனால், மகளுக்கு திருமணம் செய்வதில், திம்மராயப்பாவுக்கு விருப்பம் இல்லை. 'மகளுக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. இப்போது திருமணம் வேண்டாம்' என, பிடிவாதம் பிடித்தார். இதே காரணத்தால், வீட்டில் தினமும் தகராறு நடந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 16ம் தேதி மாலையில், வழக்கம் போன்று கூலி வேலையை முடித்து கொண்டு தாய் வீட்டுக்கு வந்தபோது, மகளை காணவில்லை. கணவரிடம் கேட்ட போது தனக்கு தெரியவில்லை என்றார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கள்ளம்பெல்லா போலீஸ் நிலையத்தில், தாய் புகார் அளித்தார்.
தலைமறைவு போலீசாரும் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகளின் திருமண விஷயத்தில், வீட்டில் சண்டை நடந்தது தெரிந்தது. இதே வேளையில், திம்மராயப்பாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாகி விட்டார்.
கணவரே மகளை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த தாய், போலீசாரிடம் கணவர் காணாமல் போனது பற்றி கூறினார். போலீசாரும் பல இடங்களில் தேடி, நேற்று காலையில் திம்மராயப்பாவை பிடித்தனர்.
அவரிடம் விசாரித்ததில், தனக்கு பிடிக்காத ஒருவரை, திருமணம் செய்து கொள்ள மகள் விரும்பியதால், திம்மராயப்பா கோபமடைந்தார்.
சம்பவ நாளன்று மகளை, வயலுக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை தன் வயலின் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் புதைத்தார்.
போலீசாருக்கு பயந்து, ஒரு மாதமாக திருப்பதி, தர்மஸ்தலா உட்பட பல்வேறு புண்ணிய தலங்களில் தலைமறைவாக இருந்துள்ளார். ஆரம்பத்தில் அவர் குளறுபடியாக பேசினார்.
போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது, மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். உடலை புதைத்த இடத்தையும் காட்டினார். சிரா தாசில்தார் முன்னிலையில், நேற்று மாலை உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
'மகளை ஆணவக்கொலை செய்த திம்மராயப்பாவை, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என, உறவினர்களும், கிராமத்தினரும் வலியுறுத்தினர்.
