/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலித்த மகள் ஆணவ கொலை கொடூர தந்தை கைது
/
காதலித்த மகள் ஆணவ கொலை கொடூர தந்தை கைது
ADDED : ஏப் 28, 2025 05:03 AM
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின், ஹஞ்சனாளா கிராமத்தில் வசிப்பவர் லக்கப்பா கம்பளி, 40.
இவரது மகள் ரேணுகா, 17, தன் கிராமத்தில் வசிக்கும், வேறு ஜாதியை சேர்ந்த ஹனுமந்தா, 20, என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் ஊரை விட்டு ஓடினர்.
மைனர் மகள் கடத்தப்பட்டதாக, 2023ல் ஹனுமந்தா மீது லிங்கசகூர் போலீஸ் நிலையத்தில், லக்கப்பா கம்பளி புகார் அளித்தார். போலீசாரும் காதலர்களை கண்டுபிடித்தனர்.
ரேணுகாவை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஹனுமந்தாவை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
வழக்கில், மூன்று மாதம் சிறையில் இருந்த ஹனுமந்தா, ஜாமினில் விடுதலையானார். மீண்டும் ரேணுகாவுடன் நெருக்கமாக பழக துவங்கினார்.
தனக்கு 18 வயது நிரம்பிய பின், ஹனுமந்தாவையே திருமணம் செய்வேன் என, ரேணுகா அவ்வப்போது கூறி வந்தார்.
இதனால், ஆத்திரமான தந்தை லக்கப்பா கம்பளி, 2024 செப்டம்பர் 29ம் தேதி, மகளை தோட்டத்துக்கு அழைத்து சென்று கட்டையால் அடித்து, கொலை செய்தார். உடலை கிருஷ்ணா ஆற்றில் வீசினார்.
இதற்கிடையே, ஹனுமந்தா மீதான போக்சோ வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிமன்றம், ரேணுகாவை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி, அவரது தந்தை லக்கப்பாவுக்கு உத்தரவிட்டது. அவர் இரண்டு, மூன்று முறை பொய் சொல்லி தப்பினார்.
சந்தேகமடைந்த போலீசார், அவரது கிராமத்துக்கு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
லக்கப்பா, மகளை கொலை செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவரை நேற்று கைது செய்தனர்.

