/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கில் தந்தை, மகன் கைது ஆறு மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது
/
கொலை வழக்கில் தந்தை, மகன் கைது ஆறு மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது
கொலை வழக்கில் தந்தை, மகன் கைது ஆறு மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது
கொலை வழக்கில் தந்தை, மகன் கைது ஆறு மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது
ADDED : நவ 22, 2025 05:14 AM

விஜயபுரா: ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
விஜயபுரா மாவட்டம், சிந்தகி தாலுகாவின் பன்னிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மஹாதேவப்பா ஹரிஜனா, 55. இவர் கூலி வேலை செய்து வந்தார்.
மே 31ம் தேதி, அதே கிராமத்தில் வசிக்கும் சித்தனகவுடா கங்கரெட்டி என்பவரின் நிலத்துக்கு, பணிக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிந்தகி போலீஸ் நிலையத்தில், குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், சித்தனகவுடா கங்கரெட்டி நிலத்தின் அருகில், மஹாதேவப்பாவின் உடல் அழுகிய நிலையில், ஜூன் 3ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மண்டையில் பலமாக தாக்கி கொலை செய்திருப்பது தெரிந்தது. சம்பவ இடத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
சந்தேகம் சாட்சிகள், தடயங்கள் இல்லையென வழக்கை மூடும் நிலையில், போலீசாருக்கு கிடைத்த சில தகவல்கள், வழக்கின் திசையை மாற்றியது. நில உரிமையாளர் சித்தன கவுடா கங்கரெட்டியின் மனைவி மல்லம்மாவுக்கும், கொலையான மஹாதேவப்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
எனவே சித்தனகவுடா கங்கரெட்டி, அவரது மகன் அப்பாசாஹேப் கவுடா மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, சரியாக பதில் அளிக்கவில்லை. சாட்சிகள் இல்லாததால், அவர்களை கைது செய்ய முடியவில்லை.
எனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற போலீசார், சித்தனகவுடா கங்கரெட்டி, அவரது மனைவி மல்லம்மா, மகன் அப்பாசாஹேப் கவுடா ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்தனர். இதை தொடர்ந்து தந்தையும், மகனும் கொலையாளிகள் என்பது உறுதியானது.
பெங்களூரில் வசிக்கும் அப்பாசாஹேப் கவுடா, மே 31ம் தேதி சிந்தகி வந்தார். தன் தாய் மல்லம்மாவுடன், நிலத்துக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின், தாயை அங்கு விட்டு விட்டு, அப்பாசாஹேப் கவுடா வீட்டுக்குத் திரும்பினார். அப்போது தான் தன் மொபைல் போனை, நிலத்தின் ஷெட்டில் மறந்து வைத்து விட்டதை அறிந்து, மீண்டும் நிலத்துக்கு வந்தார்,
அப்போது ஷெட்டில், தாயும், கூலித்தொழிலாளி மஹாதேவப்பாவும் உல்லாசமாக இருப்பதை பார்த்தார்.
கோபமடைந்த அப்பாசாஹேப் கவுடா, அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து, மஹாதேவப்பாவின் மண்டையில் ஓங்கி அடித்தார்.
அதே நேரத்தில் அங்கு வந்த சித்தனகவுடா கங்கரெட்டியும் நடந்ததை அறிந்து அவரும் சேர்ந்து தாக்கியதில் மஹாதேவப்பா உயிரிழந்தார்.
அவரது உடலை, பக்கத்து நிலத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

