/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூவர் தற்கொலை முயற்சி தந்தை, மகன் உயிரிழப்பு
/
மூவர் தற்கொலை முயற்சி தந்தை, மகன் உயிரிழப்பு
ADDED : மே 15, 2025 11:17 PM

உடுப்பி: ஒரே குடும்பத்தில் மூவர், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். தந்தையும், மகனும் உயிரிழந்தனர். தாய் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுகிறார்.
உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவின், குஞ்சுகாருபெட்டு கிராமத்தில் வசித்தவர் மாதவ தேவாடிகா, 56. இவரது மனைவி தாரா, 53. தம்பதிக்கு கிரிஷ் தேவாடிகா, 22, என்ற மகன் உள்ளார்.
மாதவ தேவாடிகா, பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றினார். இதில் கிடைத்த வருவாயை வைத்து, குடும்பத்தை காப்பாற்றினார். குடும்ப தேவைக்காக வங்கி, தனியார் நபர்கள் என, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கடனை அடைக்கும்படி, வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. கடனை அடைக்காவிட்டால் ஊரார் முன்னிலையில், குடும்ப மானம் போய்விடும் என, மாதவ தேவாடிகா குடும்பத்தினர் அஞ்சினர்.
இந்நிலையில் மாதவ தேவாடிகா, நேற்று காலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டார். கிராமத்தில் இருந்த கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை காப்பாற்ற மகனும் கிணற்றில் குதித்தார். இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கணவரும், மகனும் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த தாரா, மனம் நொந்து அதே கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை கிராமத்தினர் மேலே கொண்டு வந்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்து கிராமத்துக்கு வந்த, குந்தாபுரா போலீசார், தீயணைப்பு படையினர் உதவியால், இருவரின் உடல்களை மீட்டனர்.