/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளை காப்பாற்ற போராட்டம் ஊசி மருந்துக்காக அலைந்த தந்தை
/
மகளை காப்பாற்ற போராட்டம் ஊசி மருந்துக்காக அலைந்த தந்தை
மகளை காப்பாற்ற போராட்டம் ஊசி மருந்துக்காக அலைந்த தந்தை
மகளை காப்பாற்ற போராட்டம் ஊசி மருந்துக்காக அலைந்த தந்தை
ADDED : அக் 28, 2025 04:33 AM

ஹூப்பள்ளி: வெளியில் இருந்து ஊசி மருந்து வாங்கி வரும்படி அரசு மருத்துவமனை டாக்டர்கள் எழுதிக் கொடுத்ததால், மகளை காப்பாற்ற இரவு முழுவும் தந்தை அலைந்து திரிந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
கதக் மாவட்டம், நர்குந்தில் வசிப்பவர் தாவலசாப். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை தஸ்மியா, 25ம் தேதி காலை, வீட்டு முன் விளையாடியபோது, அங்கிருந்த விஷத்தன்மை கொண்ட செடிகளின் இலைகளை தின்றுவிட்டது. மயங்கி விழுந்த குழந்தையை பெற்றோர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருந்து சீட்டு கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதால், ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அங்கிருந்த டாக்டர்கள் கூறினர். இதனால், கிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், 'அவசரமாக ஒரு ஊசி போட வேண்டும். அந்த ஊசி மருந்து, இந்த மருத்துவமனையில் இல்லை. வெளியில் இருந்து வாங்கி வாருங்கள்' என, கூறி சீட்டு எழுதிக் கொடுத்துள்ளனர்.
குழந்தையின் தந்தை தாவலசாப், மருந்து சீட்டுடன், நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை, ஹூப்பள்ளி நகரின் பல்வேறு தனியார் மருந்து கடைகள், மருத்துவமனைகளுக்கு அலைந்தார். அந்த ஊசி மருந்து கிடைக்கவில்லை. வாகனமும் இல்லாமல் சாலையில் நடந்தும், ஓடியும் பல கி.மீ., துாரம் அலைந்தார்.
தாவலசாப் நள்ளிரவில் சாலையில் ஓடுவதை, அந்த வழியாக பைக்கில் சென்ற ஸ்ரீதர் என்பவர், நிறுத்தி விசாரித்தபோது, குழந்தையை காப்பாற்ற டாக்டர் எழுதிக் கொடுத்த ஊசி கிடைக்காததை பற்றி கூறினார். தன் பைக்கில், தாவலசாபை ஸ்ரீதர் ஏற்றிக் கொண்டு, பல மருந்து கடைகளில் கேட்டும் கிடைக்கவில்லை.
மருத்துவமனைக்கு திரும்பிய தாவலசாப், டாக்டர்களிடம் கூறினார். அவர்களும், அந்த ஊசிக்கு மாற்றாக வேறு ஊசி போட்டனர். தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பரவல் குழந்தையின் தந்தை ஊசிக்காக, சாலைகளில் ஓடும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிம்ஸ் டாக்டர்கள், குழந்தைக்கு தேவையான சிகிச்சை வசதிகளை செய்தனர்.
இதுகுறித்து, கிம்ஸ் இயக்குனர் ஈஸ்வர் ஹொசமனி கூறியதாவது:
எங்களின் மருந்துகள் சேகரிப்பு பட்டியலில், 'பைசோஸ்டிகமன்' ஊசி மருந்து இல்லை. இதற்கு மாற்றாக 'நியோஸ்டிகமன்' ஊசி மருந்து போட்டோம். அந்த ஊசி மருந்து, எங்களிடம் ஸ்டாக் உள்ளது. நாங்கள் 'பைசோஸ்டிகமன்' வாங்கி வரும்படி, குழந்தையின் உறவினரிடம் கூறவில்லை.
எங்கள் மருத்துவமனை டாக்டர்கள், 'பைசோஸ்டிகமன்' ஊசி மருந்து போட்டால், குழந்தை விரைவில் குணமடைவாள் என, கூறினர். இதை கேட்ட குழந்தையின் தந்தை, ஊசியின் பெயரை கூகுளில் தேடி, டவுன் லோடு செய்துள்ளார். இதற்கு எங்கள் ஊழியர்கள் உதவியுள்ளனர். ஆனால் அந்த ஊசியை வாங்கி வரும்படி, நாங்களாக எழுதித்தரவில்லை.
இவ்வாறு கூறினார்.

