ADDED : செப் 19, 2026 02:29 AM
பாகல்கோட்: மகள் கடமை தவறியதை கண்டும், காணாமல் இருந்த மாவட்ட சுகாதார அதிகாரியை, சஸ்பெண்ட் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகல்கோட் மாவட்ட சுகாதார அதிகாரியாக பணியாற்றும் ராஜ்குமார் யரகலின் மகள் அங்கிதா. இவர், பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., உமேஷ் மேட்டியின் மருமகள். டாக்டரான இவர், வாம்பேவில் உள்ள, நம்ம கிளினிக்கில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பணிக்கு நியமிக்கப்பட்ட பின், அங்கிதா எஸ்.என். மருத்துவ கல்லுாரியில் எம்.டி., படிப்பில் சேர்ந்தார். அவர் பணிக்கு வராமல், வகுப்புக்கு செல்கிறார். பணிக்கு வராத அவருக்கு, மாதந்தோறும் 75,000 ரூபாய், அரசு சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது.
மற்றொரு பக்கம் டாக்டர் இல்லாததால், சிகிச்சை கிடைக்காமல் கிராமத்தினர் பாதிப்படைகின்றனர்.
டாக்டர் பணிக்கு வராதது குறித்து, சுகாதாரத்துறையிடம் கிராமத்தினர் புகார் அளித்தனர். துறை அதிகாரி கள் விசாரித்த போது, அங்கிதா கல்லுாரிக்கு செல்வது தெரிந்தது. பணிக்கு ஆஜராகாமல், முறைப்படி விடுமுறையும் பெறாமல், ஊதியம் பெறுவதும் தெரிந்தும், மாவட்ட சுகாதார அதிகாரி ராஜ்குமார் யரகல், நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தார். எனவே, இவரை சஸ்பெண்ட் செய்து, சுகாதாரத்துறை கமிஷனர் குருதத் ஹெக்டே, நேற்று உத்த ரவிட்டார்.
அவரது உத்தரவில், 'டாக்டர் அங்கிதா கடமை தவறியும், உயர் அதிகாரியான நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். ஒழுங்குடன் பணியாற்றுவதில் இருந்து தவறியுள்ளீர்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
