ADDED : செப் 19, 2026 02:29 AM
பெங்களூரு: ''மாநில அரசின் பால், நந்தினியின் விலையை, ஒரு லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்த வேண்டும்,'' என, மாநில அரசுக்கு, பாமுல் எனும் பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் நாகராஜ் கோரிக்கை வைத்து உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் கால்நடை தீவனத்தின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், பால் உற்பத்தி செலவும் அதிகரித்து விட்டது. மாநிலத்தில் தினமும், 1 கோடியே 11 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது, 1 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பால் விலை உயர்த்தப்பட வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு லிட்டருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 5 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். அதுபோல, மார்க்கெட்டில் விற்கப்படும் 1 லிட்டர் நந்தினி பாலின் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும். இந்த இரண்டையும் செய்தால் மட்டுமே பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். இது, மாநிலத்தில் உள்ள, 16 பால் உற்பத்தியாளர் சங்கங்களின் கோரிக்கையாகும்.
இவ்விஷயத்தில், அடுத்த மூன்று நாட்களுக்குள் மாநில அரசு முடிவெடுக்கவில்லை என்றால், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு விதான் சவுதா நோக்கி பேரணி நடத்தப்படும்.
பால் விலை உயர்ந்தால், நுகர்வோருக்கு சுமை ஏற்படும். இருப்பினும், பால் உற்பத்தியாளர்களுக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
