அமைச்சர் ருத்ரப்பா லமானிக்கு, ரூ.3 கோடி அபராதம்!
அமைச்சர் ருத்ரப்பா லமானிக்கு, ரூ.3 கோடி அபராதம்!
UPDATED : செப் 19, 2026 03:29 AM
ADDED : செப் 19, 2026 02:28 AM

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சர்க்கரை மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக ருத்ரப்பா லமானி, 67, உள்ளார். ஹாவேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான இவர், ஹாவேரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.
ஹாவேரி மாவட்டத்தின் ராணிபென்னுார் தாலுகா ஹுனசிகட்டி கிராமத்தில், ஏராளமான சட்ட விரோத கல் குவாரிகள் செயல்படுவது பற்றி, சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கவனத்திற்கு சென்றது.
'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்யும்படி, கர்நாடக மாநில ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன்ஸ் சென்டர் அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லிகார்ஜுன் உத்தரவிட்டார்.
மூன்று தவணை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஹாவேரி மாவட்டத்தில் 60 கல்குவாரிகள், விதிகளை மீறி செயல்பட்டது தெரிந்தது. இதில் ஒரு கல் குவாரி அமைச்சர் ருத்ரப்பா லமானிக்கு சொந்தமானது ஆகும்.
அமைச்சர் உள்ளிட்ட கல் குவாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்தது தெரிந்தது.
அமைச்சரை தவிர பேடகி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் நீலப்பா சிவண்ணவரின் மகன் புலிகேசி, எம்.எல்.ஏ.,வின் சகோதரர் பரமேஸ்வர் ஆகியோரும் விதிகளை மீறி, கல் குவாரி நடத்தியது தெரிந்ததால், அவர்களுக்கும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அமைச்சர் ருத்ரப்பா லமானிக்கு, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள, சுரங்கம் மற்றும் புவியியல் துறை, ஆறு மாதங்களுக்குள் மூன்று தவணைகளாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ருத்ரப்பா லமானியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மங்களூரில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
தைரியம் இல்லை இந்நிலையில், ருத்ரப்பா லமானி மீது, ஹாவேரி மாவட்ட கல் குவாரி சங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
சங்கத்தின் தலைவர் வரஜா பெலவாடி கூறுகையில், ''மற்ற மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடக்கின்றன. அங்கு மட்டும் குறைந்த தொகை அபராதம் விதித்துள்ளனர். ஹாவேரி மாவட்டத்தில் மட்டும், அதிக தொகை அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
''இதுகுறித்து அமைச்சர் ருத்ரப்பா லமானியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். விதிகளை மீறி கல்குவாரி நடத்துவதை எங்களிடம் ஒப்பு கொண்ட அவர், அரசு அபராதம் செலுத்த கூறினால் செலுத்தி தானே ஆக வேண்டும் என்கிறார். முதல்வரிடம் நேரடியாக பேச ருத்ரப்பா லமானிக்கு தைரியம் இல்லை,'' என்றார்.
அமைச்சர் செய்த தவறுக்காக அவர் மீது அரசு பிடியை இறுக்கியுள்ளது. அமைச்சராக இருந்தாலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்பதை, முதல்வர் சிவகுமார் நேரடியாக காட்டுகிறார் என்று, அவருக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர்.
ஆனால் அமைச்சராக இருந்து கொண்டு, விதிகளை மீறி கல்குவாரி நடத்தியதாக ருத்ரப்பா லமானியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
கடந்த 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, ருத்ரப்பா லமானி அமைச்சர் பதவி எதிர்பார்த்தார்.
ஆனால், அவருக்கு துணை சபாநாயகர் பதவி தான் கிடைத்தது. சிவகுமார் முதல்வர் ஆனதும், ருத்ரப்பா லமானிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
