ADDED : செப் 06, 2026 11:20 PM
பெங்களூரு: திருமண வலைதளம் வழியாக அறிமுகமாகி, பெண் டாக்டரிடம், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின், ரிச்சர்டு டவுனில், 28 வயது பெண் டாக்டர் வசிக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக, திருமண வலைதளத்தில், கடந்த, 2025 டிசம்பர் 20ம் தேதி, தன் விபரங்களை பதிவு செய்திருந்தார்.
பதிவு செய்த சில நாட்களில், கணேஷ் பர்பன் என்பவர், அந்த பெண் டாக்டரை தொடர்பு கொண்டார். டாக்டர் என அறிமுகம் செய்த அவர், கண் மருத்துவ நிபுணர் என்றார்.
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் வசிப்பதாக கூறினார். இருவரும் மொபைல் போன் எண்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், 'திருமணமாகி, விவாகரத்து பெற்றுள்ளேன். எனக்கு, 7 வயதில் மகள் உள்ளார். அவரை, உண்டு, உறைவிட பள்ளியில் சேர்த்துள்ளேன். என் பெற்றோர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒரே மகன். 2027 பிப்ரவரியில் இந்தியாவுக்கு திரும்பி, டில்லியில் மருத்துவமனை துவக்க திட்டமிட்டுள்ளேன்' என, அந்த மோசடி நபர் கூறினார்,
அதை உண்மை என நம்பிய அந்த பெண் டாக்டரும், கணேஷ் பர்பனுடன் வாட்ஸாப் அழைப்பில் தொடர்பில் இருந்தார். பெண் டாக்டரின் நம்பிக்கையை பெற்ற கணேஷ் பர்பன், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.
நடப்பாண்டு ஜனவரியில், அப்பெண்ணிடம், 'மருத்துவமனையை துவக்க, ஏற்பாடு செய்கிறேன். என் சர்வதேச வங்கி கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது. மருத்துவமனை தொடர்பாக, டில்லியில் உள்ள ஏஜன்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்' என்றார்.
அவர் கேட்டுக் கொண்டபடி, தன்னிடம் உள்ள பணத்தை பல தவணைகளாக, 22 லட்சம் ரூபாயை, அந்த போலி நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் செய்தார்.
இவ்வளவு பணத்தை அனுப்பியும், மேலும் பணம் கேட்டதால், சந்தேகமடைந்த பெண் டாக்டர், உஷாராகி கேள்வி எழுப்பினார். அதன்பின் கணேஷ் பர்பன், தன் தொடர்பை துண்டித்து கொண்டார்.
தான் ஏமாந்ததை உணர்ந்த பெண் டாக்டர், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர். அந்த போலி நபரை தேடி வருகின்றனர்.
