ADDED : ஆக 16, 2025 11:20 PM

சாம்ராஜ்நகர்: ஆண் புலி தாக்கியதில், 11 வயது பெண் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சாம்ராஜ்நகரில் உள்ள பண்டிப்பூர் பாதுகாக்கப்பட்ட புலிகள் வனப்பகுதியில், புலிகள் நடமாடுவது வழக்கம். அவ்வகையில், நேற்று முன்தினம் குந்தகெரே எல்லை பகுதியில், ஆண் புலியும், பெண் புலியும் ஆக்ரோஷமாக சண்டை போட்டன. இதில் 11 வயதுள்ள பெண் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை சுற்றுலாப்பயணியர், உள்ளூர் மக்கள், தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து, பண்டிப்பூர் வனப்பகுதியின் இயக்குநர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:
காயமடைந்த பெண் புலியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது. புலி மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புலியின் முன் கால்களில் ஏற்பட்டுள்ள காயம் அதிகமாக உள்ளது.
எனவே, புலியை மீண்டும் காட்டுக்குள் விடுவதற்கு சாத்தியமல்ல. விலங்குகளுக்கு இடையே சண்டை நடக்கும்போது, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.