/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உரம் தட்டுப்பாடு ; அமைச்சரின் முட்டாள்தனம் விஜயேந்திரா விளாசல்
/
உரம் தட்டுப்பாடு ; அமைச்சரின் முட்டாள்தனம் விஜயேந்திரா விளாசல்
உரம் தட்டுப்பாடு ; அமைச்சரின் முட்டாள்தனம் விஜயேந்திரா விளாசல்
உரம் தட்டுப்பாடு ; அமைச்சரின் முட்டாள்தனம் விஜயேந்திரா விளாசல்
ADDED : ஜூலை 30, 2025 07:46 AM

துமகூரு : விவசாய அமைச்சர் செலுவராயசாமியின் முட்டாள்தனத்தால், மாநிலத்தில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார்.
கர்நாடகாவில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாய துறை அலுவலகம் முன், உரத்திற்காக விவசாயிகள் கால்கடுக்க காத்து நிற்கின்றனர்.
ஆனால், 'மாநிலத்தில் உர தட்டுப்பாடு இல்லை' என, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறி வருகிறார்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில், மாநில அரசின் தோல்வியை கண்டித்து, துமகூரில் நேற்று பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
துமகூரு டவுன் பி.ஜி.எஸ்.சதுக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் பேரணி நடந்தது.
கலெக்டர் சுபா கல்யாணிடம் கோரிக்கை மனுவை, விஜயேந்திரா கொடுத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவே, எங்கள் கட்சி சார்பில் துமகூரில் பேரணி நடத்தி உள்ளோம். விவசாயிகளை கண்ணீர் வடிக்க வைப்பது நல்ல அறிகுறி இல்லை.
விவசாய அமைச்சர் செலுவராயசாமியின் முட்டாள்தனத்தால் மாநிலத்தில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. வானிலை ஆய்வு மையம் அதிக மழை பெய்யும் என்று முன்கூட்டியே கூறி இருந்தும், உரத்தை கையிருப்பு வைக்க அரசு தவறிவிட்டது. உரம் விஷயத்தில் உண்மை நிலை என்ன என்று, அமைச்சர் செலுவராயசாமிக்கு தெரியவில்லை.
மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தவில்லை. மாதத்திற்கு நான்கு முறை டில்லி சென்று ராகுல், சோனியா வீட்டு வாசலில் சித்தராமையாவும், சிவகுமாரும் அமர்ந்திருந்தால் இங்கு யார் ஆட்சி நடத்துவர்?
இவ்வாறு அவர் கூறினார்.