/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விக்டோரியா மருத்துவமனையில் தீ விபத்து
/
விக்டோரியா மருத்துவமனையில் தீ விபத்து
ADDED : ஜூலை 02, 2025 07:33 AM

பெங்களூரு: அரசு விக்டோரியா மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. டாக்டர்கள் உட்பட மருத்துவ ஊழியர்களின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பெங்களூரு, தரகுபேட்டில் அரசு விக்டோரியா மருத்துவமனை உள்ளது. இங்கு தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டடம் உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணி அளவில், இக்கட்டத்தின் முதல் தளத்தில் பணியில் இருந்த டாக்டர் திவ்யா, செமினார் அறையில் இருந்து புகை வருவதை கவனித்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, சுவிட்ச் போர்டில் தீப்பிடித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஆண் செவிலியர்களுக்கு தகவல் தெரிவித்து, மெயின் சுவிட்சை 'ஆப்' செய்யுமாறு கூறினார். பின், தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும், மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
'கோட் ரெட்'
'கோட் ரெட்' எனும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. முதல் தளத்தில் இருந்த நோயாளிகளை இடம் மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதல் தளத்தில் ஐ.சி.யு.,வில் இருந்த நோயாளிகளுக்கும், சாதாரண வார்டில் செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும் டிராலியில் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வந்து, அவர்கள் சுவாசிக்க இணைப்பு கொடுக்கப்பட்டது.
சக்கர நாற்காலிகள், பேட்டரியால் இயங்கும் மூன்று வாகனங்களை கொண்டு வந்தனர். 20 நிமிடங்களில் முதல் தளத்தில் இருந்த 14 ஆண்கள், ஐந்து பெண்கள், ஏழு குழந்தைகள் என, 26 பேரும், 100 மீட்டர் தொலைவில் உள்ள, 'எச்' பிளாக்கிற்கு மாற்றப்பட்டனர். டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், செக்யூரிட்டிகள் துரிதமாக செயல்பட்டனர்.
டாக்டர் திவ்யா கூறியதாவது:
நோயாளிகள் அதிகமாக இருந்ததால், யாரும் ஓய்வெடுக்கவில்லை. ஓய்வு அறைக்குச் செல்லும்போது, செமினார் அறையில் இருந்து புகை வருவதை பார்த்தேன். உள்ளே சென்று பார்த்தபோது, சுவிட்ச் போர்டில் தீப்பற்றியிருந்தது.
இட மாற்றம்
தீயணைப்பு கருவி மூலம், தீயை அணைக்க முயற்சித்தோம். ஆனால், தீ வேகமாக பரவியது. இதனால் 'கோட் ரெட்' அறிவிக்கப்பட்டது. உடனடியாக நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது பெரும் சவாலாக இருந்தது. நல்லவேளையாக, வென்டிலேஷனில் எந்த நோயாளியும் இல்லை. அங்கு நோயாளிகள் இருந்திருந்தால், அவர்களை இடம் மாற்றம் செய்வது கடினமாக இருந்திருக்கும்.
ஏற்கனவே தீ விபத்தால் உடல் முழுதும் காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை, வெறும் கையால் தொடக்கூடாது. எனவே, அவர்கள் மீது போர்வை போர்த்தி, கவனமாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்து நடந்த பகுதிக்கு, மருத்துவமனை டீன் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணன், மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் தீபக், எச்.ஓ.டி., யோகேஸ்வரப்பா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுபணர் டாக்டர் ஸ்மிதா ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.