ADDED : மார் 21, 2026 05:42 AM
யாத்கிர்: பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததுடன், மருமகளான தன் மனைவி மீதும் கண் வைத்த தந்தையை கொலை செய்த மகன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
யாத்கிர் மாவட்டம் வடகேரா தாலுகா, கோனாளா கிராமத்தில் வசித்தவர் ஹம்பண்ண சஜ்ஜனா, 75. இவர் மார்ச், 12ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பல கோணங்களில், விசாரணை நடத்திய போலீசார், ரமேஷ், 40, ஜி.வீரேஷ், 35, எம்.வீரேஷ், 35, கிருஷ்ணா, 35, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொலை ரகசியம் அம்பலமானது. ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்தது மகன் நரசரெட்டி, 45, என்பது தெரியவந்தது.
கொலையான ஹம்பண்ண சஜ்ஜனாவின் மொபைல் போனை, போலீசார் ஆய்வு செய்த போது, பல பெண்களுடன் எடுத்து கொண்ட போட்டோக்கள் இருந்தன.
அவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்; எட்டு ஆண்டுகளுக்கு முன், அவரது மனைவி காலமான பின், மகன்களுடன் இருக்காமல், தன் நிலத்தில் இருந்த வீட்டில் தனியாக வசித்தார்.
இவருக்கு சொந்தமாக, 48 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், மூன்று மகன்களுக்கு தலா நான்கு ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்து விட்டு மிச்சமுள்ள, 36 ஏக்கர் நிலத்தை, தன் பெயரிலேயே வைத்திருந்தார். அதிலிருந்து கிடைத்த வருவாயை வைத்து கொண்டு, உல்லாசமாக வாழ்ந்தார். பெண்களை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
நிலத்தில் வேலைக்கு வரும் பெண்களையும், தன் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி, மகன் நரசப்பாவின் மனைவியுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த நரசரெட்டி, குடும்ப கவுரவம் பாழாகும் என அஞ்சி, தந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.
திருப்பதியை சேர்ந்த ரமேஷ், ஜி.வீரேஷ், எம்.வீரேஷ், கிருஷ்ணா ஆகியோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து, தந்தையை கொலை செய்ய வைத்ததை, நரசரெட்டி ஒப்புக்கொண்டார். ஐவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
