ADDED : அக் 04, 2025 04:29 AM

அசைவ உணவு பிரியர்களுக்கும், புரட்டாசி மாதம் என்றாலே கஷ்டம் தான். இம்மாதத்தில் அசைவ உணவு சாப்பிட கூடாது; வீடுகளிலும் செய்து தர மாட்டோம் என்று வீடுகளில் கன்டீஷன் போட்டு விடுவர். எப்போ தான் இந்த புரட்டாசி மாசம் முடியுமோ என்று, அசைவ உணவு சாப்பிடுவோர் எதிர்பார்த்து இருப்பர்.
இத்தகையவர்களுக்காக அசைவ உணவு டேஸ்டில் செய்ய கூடிய, சைவ உணவு வகைகள் நிறைய உள்ளது. இதில் ஒன்று சிப்பி காளான் குழம்பு. இந்த குழம்பை அசைவ குழம்பு போன்று சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* ஒரு கப் சிப்பி காளான்
* ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி
* நான்கு சிவப்பு மிளகாய்
* ஒரு டீஸ்பூன் சீரகம்
* ஒரு டீஸ்பூன் சோம்பு
* ஒரு டீஸ்பூன் மிளகு
* ஒரு கொத்து கருவேப்பிலை
* அரை டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு
* ஒரு பெரிய வெங்காயம்
* மூன்று தக்காளி
* அரை டீஸ்பூன் கரம் மசாலா பவுடர்
* சின்ன வெங்காயம் 15
* ஏழு பல் பூண்டு
* ஒரு துண்டு இஞ்சி
* கால் டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
* உப்பு தேவையான அளவு
செய்முறை:
அடுப்பை ஆன் செய்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, கருவேப்பிலை போட்டு நன்கு வறுத்து ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் மீண்டும் எண்ணெய் சேர்த்து தோல் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், தண்ணீரில் கழுவி வைத்துள்ள சிப்பி காளான் சேர்த்து வதக்க வேண்டும். மஞ்சள் பவுடர், கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து வெந்ததும் கொத்தமல்லி இல்லைகள் துாவி இறக்கினால், சுவையான சிப்பி காளான் கறி குழம்பு தயார். அப்படியே அசைவ குழம்பு வாசத்தில் இருக்கும்.
வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், பலாவ், வெஜிடபிள் ரைஸ் உணவுகளுக்கு, இந்த குழம்பு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.
- நமது நிருபர் -