/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் பூங்காவில் நாளை முதல் மலர் கண்காட்சி
/
லால்பாக் பூங்காவில் நாளை முதல் மலர் கண்காட்சி
ADDED : ஜன 13, 2026 04:57 AM

பெங்களூரு: பெங்களூரு லால்பாக் பூங்காவில், குடியரசு தினத்தை முன்னிட்டு மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆகியோர் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர்.
இதுகுறித்து, தோட்டக்கலை துறை பொது செயலர் கிரீஷ் கூறியதாவது:
குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் நாளை முதல், 26ம் தேதி வரை, மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. 14ம் தேதி மாலை 4:00 மணிக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆகியோர் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கின்றனர். அதன்பின், பொது மக்கள் பார்வையிடலாம்.
சுற்றுச்சூழல், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆர்வலரான எழுத்தாளர் பூர்ண சந்திர தேஜஸ்விக்கு, இம்முறை மலர் கண்காட்சி அர்ப்பணிக்கபடுகிறது. லால்பாக் பூங்காவின் கண்ணாடி மாளிகையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரிய மலை, விலங்குகள், பறவைகள், நீர் வீழ்ச்சிகள் மக்களை மகிழ்விக்கும்.
தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, டார்ஜிலிங், வயநாடு உட்பட பல இடங்களில் இருந்து, பூக்கள் வந்துள்ளன. 95க்கும் அதிக வகை சேர்ந்த, 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பூக்கள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. லால்பாக் பூங்காவில் வளர்ந்துள்ள, பூக்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மலர் கண்காட்சியை காண, பெரியவர்களுக்கு, 80 ரூபாய் டிக்கெட் கட்டணம். விடுமுறை நாட்களில், 100 ரூபாய் கட்டணம் இருக்கும். சிறியவர்களுக்கு, 30 ரூபாய். ஆறு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, அனுமதி இலவசம். மலர் கண்காட்சிக்காக 3.2 கோடி ரூபாய் செலவிடப்படுள்ளது. இம்முறை, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தரலாம் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

