/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெரு நாய்களுக்கு உணவு: பெங்., மாநகராட்சி தவிப்பு
/
தெரு நாய்களுக்கு உணவு: பெங்., மாநகராட்சி தவிப்பு
ADDED : ஆக 24, 2025 11:19 PM

பெங்களூரு: சாலைகளில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு, தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவைகளுக்கு உணவளிக்க தனியிடம் நிர்ணயிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெங்களூரில், நாய்களுக்கு உணவளிக்க தனியிடம் தேடுவது, பெங்களூரு மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி, தெரு நாய்களுக்கு சிக்கன் உணவு அளிக்க முடிவு செய்துள்ளது. சரியான உணவு கிடைக்காத காரணத்தால், பொது மக்களை நாய்கள் கடிக்கின்றன.
உணவு பற்றாக்குறைக்கு தீர்வு காண, இத்திட்டத்தை மாநகராட்சி வகுத்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாய்களுக்கு சிக்கன் உணவு கொடுத்தால், சாலையில் செல்லும் சிறார்கள், மூத்த குடிமக்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரும் சவால் எதிர்ப்பு கிளம்பியதால், சிக்கன் உணவு வழங்கும் திட்டத்தை, மாநகராட்சி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே தெரு நாய்களுக்கு சாலையில் உணவளிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
இதற்கு தனியிடம் ஒதுக்கும்படி, அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இடம் தேடுவது, பெங்களூரு மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
தற்போது தெரு நாய்கள், சாலை ஓரம் உட்பட, பல இடங்களில் உணவு தேடி கொள்கின்றன. சில இடங்களில் பொது மக்கள் உணவளிக்கின்றனர். நோயால் அவதிப்படும் நாய்களுக்கு, இன விருத்தி கட்டுப்பாடு சிகிச்சைக்கு உள்ளான நாய்களுக்கு, சில நாட்கள் வரை மாநகராட்சி உணவளிக்கிறது.
அதன்பின் அவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. இந்த நாய்களை ஒரே இடத்தில் சேர்த்து வைத்து, உணவளிப்பது கஷ்டமான விஷயம். எனவே நீதிமன்ற உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, தெரியாமல் அதிகாரிகள் கையை பிசைகின்றனர்.
திட்டம் இது குறித்து, நகர வல்லுநர்கள் கூறியதாவது:
பெங்களூரில் 2.79 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. உணவு பற்றாக்குறை, அந்தந்த பகுதிகளின் சூழ்நிலை அடிப்படையில், நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பெங்களூரு போன்ற நகரங்களில், நாய்களுக்கு தினமும் உணவளிப்பது கஷ்டமான வேலையாகும். இதற்கு திட்டம் வகுக்க வேண்டியுள்ளது.
நாய்களுக்கு உணவளிக்க, அதிக ஊழியர்கள் தேவைப்படுவர். இதற்காக மாநகராட்சி அதிகம் செலவிட வேண்டி வரும். ஆண்டுதோறும் பட்ஜெட்டில், திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.