ADDED : ஆக 29, 2026 11:15 PM
பெங்களூரு: பல்வேறு மருத்துவ கல்லுாரிகளின் ஹாஸ்டல் உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்தும் உணவகங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்ய, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல்கள், 'இந்திரா' உணவகங்களின் சமையல் அறைகளில், திடீர் சோதனை நடத்தினர்.
ஹோட்டல்களில் அழுகிய காய்கறிகள், இறைச்சி, கெட்டுப்போன பால், காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுபிடித்தனர். சமையல் அறைகளும் துாய்மையாக இருக்கவில்லை.
இத்தகைய ஹோட்டல்கள் மீது, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது, கல்லுாரிகளின் விடுதி உணவகங்களில் சோதனையை துவக்கியுள்ளனர். பெங்களூரின் 34 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
மாணவர்களுக்கு தரமான உணவு அளிக்கப்படுகிறதா என்பதை, தெரிந்து கொள்ளும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது. பல கல்லுாரிகளின் உணவகங்களில் காலாவதியான ரவை, பால் போன்ற உணவு பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
சில உணவகங்களில், அழுகிய காய்கறிகள், இறைச்சி போன்றவை இருந்தன. துாய்மை இருக்கவில்லை. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணைய விதிகளை மீறிய, ஐந்து உணவகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறிய தாவது:
ஹோட்டல்கள், உணவகங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும் மக்களுக்கு, மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் நோக்கமாகும். எனவே, திடீர் சோதனை நடத்துவது அவசியம். இனியும், எங்களின் சோதனை தொடரும்.
மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய, கல்லுாரிகளிள் உணவகங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்.
விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளோம். மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்ற, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
