/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யானையிடம் இருந்து தப்பியவருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம்
/
யானையிடம் இருந்து தப்பியவருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம்
யானையிடம் இருந்து தப்பியவருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம்
யானையிடம் இருந்து தப்பியவருக்கு வனத்துறை ரூ.25,000 அபராதம்
ADDED : ஆக 12, 2025 11:57 PM

சாம்ராஜ்நகர்:பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில், காட்டு யானையுடன் 'செல்பி' எடுக்க முற்பட்டு, அபாயத்தில் சிக்கி, உயிர் தப்பிய சுற்றுலா பயணிக்கு, வனத்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய வனப்பகுதி சாலையில், நேற்று முன்தினம் காலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது காட்டு யானை ஒன்று, வாகனத்தை வழிமறித்து, கேரட்களை பறித்து தின்று கொண்டிருந்தது. பலரும் வாகனங்களை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் யானை செல்வதற்காக காத்திருந்தனர்.
இதேவேளையில், ஒரு பயணி, தன் காரில் இருந்து இறங்கி, யானையுடன் 'செல்பி' எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. திடீரென ஆவேசமடைந்த யானை, அவரை விரட்டியது. தடுமாறி கீழே விழுந்த அவரை யானை மிதிக்காமல் மனம் மாறி, வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கீழே விழுந்து காயமடைந்த அவரை, அவருடன் வந்தவர்கள் மீட்டு மருத்துவமனையிர் சேர்த்தனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்த வனத்துறையினர், அது குறித்து விசாரித்தனர்.
இதில் தமிழகத்தின் முதுமலையைச் சேர்ந்த பசவராஜ், 52 , என்பவரை கண்டுபிடித்தனர். அவர், பண்டிப்பூருக்கு காரில் சுற்றுலா வந்தபோது, யானையிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
பசவராஜை நேற்று வனத்துறையினர் அழைத்து வந்து 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். 'இனிமேல் இது போன்று செய்வதில்லை' என, உறுதிமொழி எழுதி வாங்கினர். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் பசவராஜ் கூறியதாவது:
பண்டிப்பூரில் உள்ள கோவிலுக்கு, காரில் சென்றோம். தரிசனம் முடிந்து திரும்பும் போது, வனப்பகுதி நெடுஞ்சாலையில் காட்டு யானையை கண்டோம். அதனுடன் 'செல்பி' எடுக்க முயற்சித்தேன். அப்போது யானை என்னை தாக்க விரட்டி வந்தது. நான் உயிர் பிழைத்ததே அதிசயம் தான்.
யாரும் இது போன்று செய்யாதீர்கள். வனப்பகுதி சாலைகளில் செல்லும்போது, வாகனங்களை நிறுத்தாதீர்கள். வன விலங்குகளுக்கு உணவளிக்கவோ, போட்டோ, வீடியோ எடுக்கவோ முயற்சிக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.