மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி: வனத்துறை அதிகாரிகள் புது திட்டம்
மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி: வனத்துறை அதிகாரிகள் புது திட்டம்
UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 09:06 PM
பெங்களூரு: சட்டவிரோதமாக மரம் வெட்டுவோர், வன விலங்குகளை வேட்டையாடுவோரை கட்டுப்படுத்த, வனத்துறை சார்பில் மோப்ப நாய் படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியின், மேலுகாமனஹள்ளி வனப்பகுதியில், மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிநவீன மையம் துவக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 நவம்பரில், முதற்கட்ட பயிற்சி ஆரம்பமானது. இங்கு பயிற்சி பெற்ற நாய்கள், கர்நாடகாவின் பல்வேறு வன விலங்குகள் சரணாலயங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வனங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் வகையில், 2012ல் மோப்ப நாய்களை பயன்படுத்த, 'டிராபிக் இந்தியா' என்ற அமைப்பு முன்வந்தது. இதற்காக ஹரியானாவில் பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள் கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்டன. இவை வனப்பகுதியின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. அதன்பின் மோப்ப நாய்கள் பயன்படுத்துவது இல்லை.
கடந்த 2024ல், வனத்துறையின் அப்போதைய தலைமை வன பாதுகாப்பு அதிகாரி சுபாஷ் மால்கடே, தற்போதைய தலைமை வன பாதுகாப்பு அதிகாரி குமார் புஷ்கர், கர்நாடகாவிலேயே நாய்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்து, பண்டிப்பூர் அருகில் பயிற்சி மையம் துவக்கினர். இதில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இன நாய்கள், வன பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுகின்றன.
மேலும், முக்கியமான வழக்குகளை கண்டுபிடிக்கவும் உதவுகின்றன. முக்கியமாக, பண்டிப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன மரக்கட்டைகளை அடையாளம் காட்டின.
வன விலங்கை கொன்ற நபரின் செருப்பை வைத்து, அவரை அடையாளம் காட்டின. தண்டேலி மற்றும் சிக்கமகளூரில், வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவின.
இந்நிலையில், மேலும், 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி, நடப்பாண்டு பிப்ரவரியில் துவங்கியுள்ளது. இவற்றுக்கு டாக்டர் அம்ருத் ஹிரன்யா பயிற்சி அளிக்கிறார்.
பயன்படுத்திய பொருட்களின் வாசனை மூலமாக, பயன்படுத்தியவர்களை கண்டுபிடிப்பது, ஒரு பொருளை வைத்து, மற்றொரு பொருளை அடையாளம் காண்பது, மோப்ப சக்தியின் மூலம் யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிவது என, பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த பயிற்சி, அடுத்தாண்டு ஜன., வரை அதாவது, 12 மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் நாட்களில் 50 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து, பாதுகாப்பு பணிக்கு தயாராக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது.
