ஸ்ரீரங்கபட்டணா தசரா ஊர்வலம்: 'தனஞ்செயா, லட்சுமி, ரூபா' தேர்வு
ஸ்ரீரங்கபட்டணா தசரா ஊர்வலம்: 'தனஞ்செயா, லட்சுமி, ரூபா' தேர்வு
UPDATED : அக் 12, 2026 09:34 PM
ADDED : அக் 12, 2026 09:06 PM
மைசூரு: ''ஸ்ரீரங்கபட்டணா தசரா ஊர்வலத்தில் பங்கேற்க, தனஞ்செயா, லட்சுமி, ரூபா ஆகிய மூன்று யானைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன,'' என தலைமை பாதுகாவலர் டாக்டர் ரவிசங்கர் தெரிவித்தார்.
மைசூரு தசரா போன்று, ஸ்ரீரங்கபட்டணாவில் வரும் 15 முதல் 18ம் தேதி வரை ஸ்ரீரங்கபட்டணா தசரா நடக்கிறது. இதில் நடக்கும் யானைகள் ஊர்வலத்தில், மைசூருக்கு வந்துள்ள யானைகளில் மூன்று யானைகள் பங்கேற்கும்.
இந்நிலையில், தசராவை ஒட்டி, மைசூரு கண்காட்சி மைதானத்தில் நேற்று, யானைகள், குதிரைகளுக்கு இறுதி கட்ட வாணவேடிக்கை ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்திகைக்கு பின், தலைமை பாதுகாவலர் டாக்டர் ரவிசங்கர் அளித்த பேட்டி:
இம்முறை ஸ்ரீரங்கபட்டணா தசராவுக்கு தனஞ்செயா, லட்சுமி, ரூபா ஆகிய யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதுபோன்று மைசூரு ஜம்பு சவாரிக்கு மூன்று நாட்களுக்கு முன், தலைமை யானை தேர்வு செய்யப்படும்.
இறுதி ஒத்திகை சிறப்பாக முடிந்தது. இதில் பங்கேற்ற யானைகள், குதிரைகள் சிறப்பாக செயல்பட்டன. அணிவகுப்பு பயிற்சியும், அரண்மனைக்குள் நடக்கும் ஒத்திகையும் இன்னும் நிலுவையில் உள்ளன.
தசரா யானைகள், மீதமுள்ள அனைத்த பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டன. இப்போது அம்பாரி யானையை தேர்ந்தெடுப்பது மட்டுமே பாக்கி உள்ளது.
ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
