/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
5 ஆண்டில் 75 புலிகள் பலி வனத்துறை அதிர்ச்சி தகவல்
/
5 ஆண்டில் 75 புலிகள் பலி வனத்துறை அதிர்ச்சி தகவல்
ADDED : ஆக 20, 2025 07:54 AM
பெங்களூரு :கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 75 புலிகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவில் 2020 ஏப்ரல் முதல் 2025 ஆகஸ்ட் வரை, 75 புலிகள் உயிரிழந்துள்ளன. இவற்றில், நாகரஹொளேவில் 26; பண்டிப்பூர் 22; பி.ஆர்.டி.,யில் 8; எம்.எம்., ஹில்சில் 5; பிற பகுதிகளில் 14 புலிகள் உயிரிழந்துள்ளன.
பிற விலங்குகளுடன் சண்டை, வயது மூப்பு, உடல் நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 62 புலிகள் உயிரிழந்தன. துப்பாக்கிச்சூடு, மின்சாரம் பாய்ந்தது, விபத்து ஆகிய இயற்கைக்கு மாறான காரணங்களால் 13 புலிகள் மரணம் அடைந்தன. இவற்றில், தொடர்புடையவர்களுக்கு 1972 வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஊர்களில், புலிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் புலிகளை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புலிகள் பிடிக்கப்பட்டு, அவை அடர் வனப்பகுதிக்குள் விடப்படும்.
மேலும், சில புலிகள் மீது சிக்னல்கள் அனுப்பும் சிப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் புலிகளின் நடமாட்டத்தை கண்டறிய முடியும். இதற்காக, பிரத்யேக குழு ஒன்று உள்ளது. புலிகளுக்கு உணவு கிடைப்பது, மான்கள் இருக்கும் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
வனப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில், புலி நடமாட்டம் தென்பட்டால் மக்களுக்கு தகவல் தெரிவிக்க, எச்சரிக்கை விடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சில பகுதிகளில் ஏ.ஐ., அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவின் அறிவுறுத்தலின்படி பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.