/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் ஒலி எழுப்பும் 'பண்ணை காவல்காரன்' : வனத்துறையின் புதிய திட்டம் வெற்றி
/
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் ஒலி எழுப்பும் 'பண்ணை காவல்காரன்' : வனத்துறையின் புதிய திட்டம் வெற்றி
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் ஒலி எழுப்பும் 'பண்ணை காவல்காரன்' : வனத்துறையின் புதிய திட்டம் வெற்றி
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் ஒலி எழுப்பும் 'பண்ணை காவல்காரன்' : வனத்துறையின் புதிய திட்டம் வெற்றி
UPDATED : டிச 26, 2025 09:02 AM
ADDED : டிச 26, 2025 06:44 AM
மைசூரு: வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை அடையாளம் கண்டு, மக்களை எச்சரிக்கும் வகையில், ஏ.ஐ., அடிப்படையிலான கேமராவை வனத்துறை பொருத்தியது. இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்போர், வனவிலங்குகளால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் தொல்லை மிக அதிகம். பயிர்களை மிதித்து அழிப்பதுடன், உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன.
இதற்கு தீர்வு காண, அதிநவீன தொழில்நுட்பத்தை தற்போது வனத்துறை பயன்படுத்துகிறது.
கிராம எல்லை மைசூரின் நாகரஹொளே தேசிய பூங்காவின் வீரனஹொசள்ளியின் பொம்மலாபுரா கிராமத்தின் எல்லையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராவை வனத்துறை பொருத்தியுள்ளது. இந்த கேமரா, 'பண்ணை காவல்காரன்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த கேமரா ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை அடையாளம் கண்டு, சத்தம் எழுப்பி மக்களை எச்சரிக்கும். யானைகள் ஊருக்குள் வரும் பாதைகளில், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. யானை வனத்தை தாண்டி ஊருக்குள் நுழைந்து கேமரா கண்களில் பட்டவுடன், இதிலுள்ள ஒலி பெருக்கி வழியாக அதிகமான சத்தம் வெளியே வரும். அப்போது, யானைகள் பீதியுடன், மீண்டும் வனத்துக்குள் ஓடிவிடும் என்பதே, வனத்துறையின் நோக்கமாகும்.
பொதுவாக யானைகளுக்கு தேனீக்கள் என்றால் மிகவும் பயம். தேனீக்கள் கூட்டமாக சத்தமிடுவதை போன்று, கேமராவில் இருந்து சத்தம் கேட்கும். அது மட்டுமின்றி, பட்டாசு வெடிப்பது, மக்கள் கூச்சலிடுவது, இடி, மின்னல் உட்பட 20க்கும் மேற்பட்ட சத்தம் கேட்கும் வகையில் கேமரா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சத்தம் யானைகளை அச்சுறுத்தி, வனத்துக்கு விரட்டும்.
நல்ல பலன் யானைகளை ஊருக்குள் வரவிடாமல், பள்ளங்கள் வெட்டி வைப்பதுண்டு. ஆனால், நாகரஹொளே பூங்கா எல்லையில் உள்ள பொம்மலாபுரா பகுதியில் பள்ளங்கள் தோண்ட முடியாத நிலை உள்ளது. இங்கு ரயில்வே தண்டவாள தடுப்புகள் பொருத்துவதும் கஷ்டமாகும். எனவே, ஏ.ஐ., அடிப்படையிலான கேமரா பொருத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இங்கு கேமரா பொருத்தி பல மாதங்களாகின்றன. அன்று முதல் யானைகள் ஊருக்குள் நுழையவில்லை. விவசாயிகளின் பயிர்களும் காப்பாற்றப்படுகின்றன. கேமராவை தாண்டி யானைகள் வரவே இல்லை.
150 மீட்டர் துாரத்தில் இருந்தே, யானைகள் வருவதை கண்டுபிடித்து விடும். கேமரா ஒன்றின் விலை ஒரு லட்சம் ரூபாயாகும். வரும் நாட்களில் மேலும் பல இடங்களில், இந்த கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

