மலையேற்றம் செய்வோர் வழி தவறினால் கண்டுபிடிக்க 'இ - டிராக்கிங்' செயலி வனத்துறை அமைச்சர் உத்தரவு
மலையேற்றம் செய்வோர் வழி தவறினால் கண்டுபிடிக்க 'இ - டிராக்கிங்' செயலி வனத்துறை அமைச்சர் உத்தரவு
ADDED : ஏப் 10, 2026 04:21 AM

பெங்களூரு: கர்நாடகாவில் மலையேற்றம் செய்வோர், இனி கட்டாயமாக அவர்களின் மொபைல் போன்களில் கண்காணிப்பு செயலியை பதிவிறக்கம் செய்வது உட்பட பல விதிமுறைகளை விதிக்கும்படி, வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டு உள்ளார்.
கேரளாவின் கண்ணுார் பகுதியை சேர்ந்த சரண்யா, குடகு மாவட்டம் தடியண்டமோல் மலையில் மலையேற்றம் சென்ற போது, திடீரென மாயமானார். நான்கு நாட்களுக்கு பின், வனப்பகுதியில் பாழடைந்த வீட்டில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
அதேபோன்று, கேரளாவின் பாலக்கோட்டை சேர்ந்த, 14 வயது ஸ்ரீநந்தா உட்பட 40 பேர் குழுவினர், கடந்த, 7 ம் தேதி, சிக்கமகளூருக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
முல்லைய்யனகிரி மலை அடிவாரத்தில் உள்ள சந்திர துரோண மலை பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மாணிக்கதாரா நீர் வீழ்ச்சி அருகே குழுவில் இருந்து பிரிந்து, வழி மாறிய சிறுமி காணாமல் போனார்.
அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், வனப்பகுதிகளில் மலையேற்றம் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக, வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு, அமைச்சர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையில், மலையேற்றம் செய்ய வந்திருந்த கேரளாவை சேர்ந்த சரண்யா, வழிதவறி மூன்று நாட்கள் காட்டில் தங்கியிருந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தின் மிக உயரமான மலைகளில் ஒன்றான, சிக்கமகளூரில் உள்ள சந்திரதோரணா மலைக்கு மலையேற்றம் செய்ய வந்திருந்த ஸ்ரீநந்தா என்ற சிறுமி காணாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, எஸ்.ஓ.பி., எனும் மலையேற்றத்துக்கான ஒரு நிலையான செயல்பாட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது. வனத்துறையால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட, 'இ - பாஸ்டு' மற்றும், 'எம்.ஸ்டிப்ஸ்' செயலிகள் போன்று, மலையேற்ற காலத்தில் மட்டும் தற்காலிகமாக மலையேறுபவர்களின் மொபைல் போன்களில் ஒரு, 'இ - டிராக்கிங்' செயலியை நிறுவலாம்.
இதன் மூலம், வழி தவறியவர்களை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். மேலும், மலையேற்றம் செய்வோருக்கு வழிகாட்டும் இயற்கை வழிகாட்டிகளுக்கு, மொபைல் சிக்னல் கிடைக்காத இடங்களில், அவர்களுக்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான கருவிகளை வழங்கி, எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்க வேண்டும்.
மலையேறும் அனைவருக்கும் காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும். இது அபாயகரமான சூழ்நிலைகள், விபத்துகள் அல்லது அவசரகால மீட்பு பணிகள் போன்ற சமயங்களில் மலையேறுபவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க உதவும்.
இந்த காரணங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, பொருத்தமான தரநிலைகளை விரைவில் வகுத்து, அவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
