வனத்துறையை விட்டுத்தர தயார் அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவிப்பு
வனத்துறையை விட்டுத்தர தயார் அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவிப்பு
UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 07:32 PM

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா மிரட்டலால் அதிருப்தி அடைந்துள்ள, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தான் வகிக்கும் துறையை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஹாசனில் இருந்து, 56 காட்டு யானைகளை சிக்கமகளூரின் பத்ரா வன சரணாலயத்திற்குள் விரட்டும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நயனா, ராஜேகவுடா, தம்மையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தம்மையைா நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ''வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டிக்கு, வனத்துறை பற்றி அனுபவம் இல்லை. மலைநாடு மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தான், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊர்களில் நிலவும் பிரச்னை பற்றி தெரியும். எனவே, பெங்களூரு, பீதர், கலபுரகியை சேர்ந்தவர்களை வனத்துறை அமைச்சராக நியமித்தால் இது தான் கதி,'' என்றார்.
இதற்கு ராமலிங்கரெட்டி பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:
நான் தற்போது எட்டாவது முறை எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். நிறைய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளேன்.
இப்போது வனத்துறையை நிர்வகிக்கிறேன். காட்டு யானைகளை பத்ரா வனப்பகுதிக்குள் விரட்டுவதில், சிக்கமகளூரு மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், துறையின் அமைச்சர் என்ற முறையில் என்னை சந்தித்து பேசியிருக்க வேண்டும். அதை விட்டு ராஜினாமா செய்வதாக கூறுவது சரியல்ல.
என்னிடம் வந்து, யாராவது உங்கள் ஊர் என்னவென கேட்டால், பெங்களூரு என சொல்வேன். யானைகளிடம் சென்று உனது ஊர் என்ன என்று கேட்க முடியுமா...
மலைநாடு மாவட்டங்களில் உள்ள அனைத்து வனப்பகுதியிலும், யானைகள் உலா வருகின்றன. பத்ரா சரணாலயம் 2.20 லட்சம் ஏக்கர் கொண்ட அடர்ந்த வனப்பகுதி என்பதால், யானைகளை அங்கு விரட்ட முடிவு எடுக்கப்பட்டது.
மலைநாடு மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களில் யாராவது ஒருவருக்கு, வனத்துறை அமைச்சர் பதவி வழங்க முதல்வர் நினைத்தால், வனத்துறையை விட்டு கொடுக்க நான் தயாராக உள்ளேன்.
ஜப்பானில் இருந்து வந்த பின், வரும் 30ம் தேதி சிக்கமகளூரு எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
