ADDED : ஆக 22, 2026 01:27 AM
சிக்கமகளூரு: மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை பிடிக்க வந்த வனத்துறை ஊழியர், குடிபோதையில் இருந்ததை, கிராமத்தினர் கண்டித்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புரா தாலுகாவின், திம்மாபுரா, கெஜ்ஜகொண்டனஹள்ளி, கடூரு தாலுகாவின் ஹுலிகெரே கிராமங்களில், சில நாட்களாக சிறுத்தை நடமாடி, மக்களை அச்சுறுத்தியது.
ஹுலிகெரே கிராமத்தில் அதிகமாக நடமாடியது.
வீடுகளின் காம்பவுண்ட் சுவர்கள் மீது, சிறுத்தை அமர்ந்திருந்தது. இது அரசு பள்ளியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால், கிராமத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். சிறுத்தையை பிடிக்கும்படி பல முறை கேட்டும், வனத்துறையினர் பொருட்படுத்தவில்லை. கிராமத்தினர் போராட்ட எச்சரிக்கை விடுத்த பின், வனத்துறையினர் இரண்டு நாட்களுக்கு முன், கிராமத்துக்கு வந்தனர்.
அதில் ஒருவர், குடிபோதையில் தள்ளாடியபடி இருந்தார். சிறுத்தையை பிடிக்க குடிபோதையில் வந்த வன ஊழியரை, கிராமத்தினர் கண்டித்தனர். அதன் பின், வனத்துறையினர், சிறுத்தை நடமாடும் இடத்தில், கூண்டு வைத்து சென்றனர்.
நேற்று அதிகாலை உணவு தேடி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. இது குறித்து, வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். சிறுத்தையை மீட்டு, வனத்துக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
