/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எத்னாலை நீக்கிய முடிவில் மறு பரிசீலனை பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் வேண்டுகோள்
/
எத்னாலை நீக்கிய முடிவில் மறு பரிசீலனை பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் வேண்டுகோள்
எத்னாலை நீக்கிய முடிவில் மறு பரிசீலனை பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் வேண்டுகோள்
எத்னாலை நீக்கிய முடிவில் மறு பரிசீலனை பா.ஜ., 'மாஜி' அமைச்சர்கள் வேண்டுகோள்
ADDED : மார் 27, 2025 11:08 PM

பல்லாரி: ''எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் டில்லி சென்று பா.ஜ., மேலிடத்தை சந்திப்பேன். பசனகவுடா பாட்டீல் எத்னால் விஷயத்தில் முடிவை மறு பரிசீலனை செய்யும்படி, வேண்டுகோள் விடுப்பேன்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் இருந்து எத்னாலை நீக்கியுள்ளனர். லிங்காயத், பஞ்சமசாலி மிகப்பெரிய சமுதாயமாகும். இந்த சமுதாயத்தினரை இழக்க கூடாது. நான் பலமுறை எத்னாலிடம் கூறினேன்.
'நீங்கள் எதையும் முகத்துக்கு நேராக இருந்ததை, இருந்தபடி பேசுகிறீர்கள். உங்கள் மனதில் கல்மிஷம் இல்லை. ஆனால் அரசியலில் இப்படி இருப்பது சரியல்ல. உள்ளொன்றும், புறமொன்றும் பேசுவதே அரசியல். நீங்களும் மாறுங்கள்' என ஆலோசனை கூறினேன்.
எத்னாலை நீக்கியது ஹிந்துக்களுக்கு வருத்தமான விஷயமாகும். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், டில்லி சென்று மேலிடத்தை சந்திப்பேன்.
மேலிட தலைவர்களுக்கு எதிராக பேச மாட்டேன். ஆனால், தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
ஒரு மனிதர் அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியாது. இதை மேலிட தலைவர்களுக்கு உணர்த்த முயற்சிப்பேன். இரண்டு கோஷ்டியினர் மோதலால், இப்படி நடந்துள்ளது.
இதை மேலிடம் சரி செய்ய வேண்டும். தன் முடிவை மறு பரிசீலனை செய்தால், கட்சிக்கு நன்மை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி: பசனகவுடா பாட்டீல் எத்னாலை கட்சியில் இருந்து நீக்கி, பா.ஜ., மத்திய ஒழுங்கு குழு நடவடிக்கை எடுத்து உள்ளது.
எத்னால் கர்நாடக பா.ஜ.,வில் மூத்த தலைவர். லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். ஆனாலும் கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு சில நேரத்தில் நாம் கட்டுப்பட வேண்டி உள்ளது. எங்கள் அணியில் உள்ள அனைவரும் எத்னாலுக்கு ஆதரவாக இருப்போம்.
அவர் பெங்களூரு திரும்பியதும், நாங்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவோம். எத்னால் மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்கப்படுவார்.
எத்னாலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யும்படி, கட்சி மேலிடத்திற்கு நான் கடிதம் எழுதுவேன். கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும், எம்.எல்.ஏ., சோமசேகர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எத்னால், நான் உட்பட எங்கள் அணியில் எல்லாரும் பா.ஜ.,வில் நீடிப்போம். கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை. அடுத்த தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வரும்.
கட்சி எங்களுக்கு தாய் போன்றது. தேசிய தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. விஜயேந்திரா பற்றி இனி பேச மாட்டேன்.