/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வில் எந்த அணியும் இல்லையாம் 'மாஜி' முதல்வர் சதானந்த கவுடா சமாளிப்பு
/
பா.ஜ.,வில் எந்த அணியும் இல்லையாம் 'மாஜி' முதல்வர் சதானந்த கவுடா சமாளிப்பு
பா.ஜ.,வில் எந்த அணியும் இல்லையாம் 'மாஜி' முதல்வர் சதானந்த கவுடா சமாளிப்பு
பா.ஜ.,வில் எந்த அணியும் இல்லையாம் 'மாஜி' முதல்வர் சதானந்த கவுடா சமாளிப்பு
ADDED : ஏப் 07, 2025 08:00 AM

மல்லேஸ்வரம் : ''பா.ஜ.,வில் ஏ, பி, சி, டி என எந்த அணியும் இல்லை; இருக்கவும் கூடாது,'' என முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று கட்சி நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. விழாவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:
வாஜ்பாய்
நாட்டில், பா.ஜ.,வுக்கான தனி இடம் பிடிக்க தலைவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு செல்லகூட வசதியில்லை. பொருளாதார பலமும் இல்லை.
ஆனாலும், நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பா.ஜ., - எம்.பி.,க்கள் இருந்தனர். அந்த சூழ்நிலையிலும், கட்சி தொண்டர்கள் சோர்வடையவில்லை. இந்நேரத்தில், அடல் பிஹாரி வாஜ்பாய் தான், அனைவருக்கும் ஊக்கம் அளித்து வந்தார்.
நான், 1972ல் ஷிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலரானேன். அதன்பின் அதன் தலைவரானேன். ஷிகாரிபுரா தாலுகா பா.ஜ., தலைவராகவும், பின் ஷிவமொக்கா மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டேன். 1988ல் மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டேன்.
கட்சி எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. என் அரசியல் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள், வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளேன். ஆனால், என் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
உயிர் நாடி
முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பேசியதாவது:
தொண்டர்களே கட்சியின் உயிர் நாடி. அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், நம் கவனம் நம் பணியில் இருக்க வேண்டும்.
கட்சி தொடர்பான விஷயங்களை, நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டுமே தவிர, வெளியே பேசக்கூடாது. மாநிலத்தில் நம் கட்சிக்கு பல சவால்கள் உள்ளன. காங்கிரஸ் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநிலத்தில் ஊழல் ஆட்சியை காங்கிரஸ் நடத்துகிறது.
கட்சியில் உள்ள குழப்பங்களை ஓரம் கட்டி விட்டு, போர்களத்தில் சண்டையிட தயாராக வேண்டும். நமக்குள் இருக்கும் வேற்றுமையை புறந்தள்ளி, மாநில அரசுக்கு எதிராக போராட வேண்டும்.
யாரோ, ஏதோ சொல்கிறார் என்பதற்காக நம் கவனத்தை திசை திருப்ப கூடாது. ஊடகத்தில் பேசுவதால் பெரியவர்கள் ஆகிவிட முடியாது. கீழ்மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.
ஏ, பி, சி, டி
பா.ஜ.,வில் 'ஏ, பி, சி, டி' என எந்த அணியும் இல்லை; இருக்கவும் கூடாது. மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. நம் மனதில் தோன்றுவதை பேச வேண்டும். கட்சியை தனி நபரால் கட்டியெழுப்ப முடியாது, அதற்கு குழுவாக செயல்பட வேண்டும். தென் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க கர்நாடகா நுழைவு வாயிலாக இருந்துள்ளது. இதை தக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

