/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தட்டில் வைத்த தவளைகள் காங்கிரசார் 'மாஜி' அமைச்சர் ஸ்ரீராமுலு கிண்டல்
/
தட்டில் வைத்த தவளைகள் காங்கிரசார் 'மாஜி' அமைச்சர் ஸ்ரீராமுலு கிண்டல்
தட்டில் வைத்த தவளைகள் காங்கிரசார் 'மாஜி' அமைச்சர் ஸ்ரீராமுலு கிண்டல்
தட்டில் வைத்த தவளைகள் காங்கிரசார் 'மாஜி' அமைச்சர் ஸ்ரீராமுலு கிண்டல்
ADDED : ஜூலை 02, 2025 07:47 AM

கொப்பால் : ''காங்கிரஸ் அரசு ஆட்டம் கண்டுள்ளது. அக்கட்சியில் உள்ள பூசலை தீர்க்காமல், பா.ஜ., பற்றி பேசுவது சரியல்ல.
''அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் 'தட்டில் வைத்த தவளைகள்' போன்று நடந்து கொள்கின்றனர்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
'சட்டசபை தேர்தலில் இரண்டு முறையும், லோக்சபா தேர்தலில் ஒருமுறையும் தோற்ற ஸ்ரீராமுலுவுக்கு, என்னை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?' என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, கொப்பால் மாவட்டம், கங்காவதியில் ஸ்ரீராமுலு நேற்று கூறியதாவது:
அரசியலில் வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல. போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெற்றால், மற்றொருவர் தோற்க வேண்டும். தேர்தலில் தோற்றதற்காக, முதல்வர் சித்தராமையா என்னை கேலி செய்வது சரியல்ல.
அவரின் கூற்றுப்படி, தோற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா? 2018 சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட சித்தராமையா, கஷ்டப்பட்டு 1,600 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
துாய்மை
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசில் ஒரு அமைச்சர் கூட துாய்மையானவர் அல்ல. ஊழல் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஊழலில் மூழ்கி உள்ளனர்.
பெயருக்கு தான், மாநிலத்தில் அரசு இருக்கிறது. ஆனால், எந்த மேம்பாட்டுப் பணிகளும் நடக்கவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை நிதி வரவில்லை.
மாநிலத்தை திட்டமிட்டு நிர்வகிக்க வேண்டும். எந்த திட்டமும் செயல்படுத்தாததால், மாநில மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
கடந்தாண்டு துங்கபத்ரா அணையின் 'ஷட்டர் கேட்' அடித்துச் செல்லப்பட்டது. 11 மாதங்கள் கடந்த பின்னரும், மற்ற 'ஷட்டர் கேட்'களில் அரசு கவனம் செலுத்தவில்லை. விலை மதிப்பில்லா தண்ணீரை வீணாக்கக்கூடாது.
ஆர்வமில்லையா?
இரண்டு போக விளை நிலங்களுக்கு போதுமான தண்ணீர் இருக்க வேண்டும். அனைத்து ஷட்டர் கேட்களும் பழுதாகி உள்ளது.
இதன் பாதுகாப்பில் அரசுக்கு ஆர்வம் இருந்தால், புதிய கேட்கள் பொருத்துவதற்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
காங்கிரஸ் அரசு தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அக்கட்சியில் உள்ள பூசலை தீர்க்காமல், பா.ஜ.,வை பற்றி பேசுவது சரியல்ல.
இந்நேரத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் - அமைச்சர்களும் 'தட்டில் வைத்த தவளைகள்' போன்று நடந்து கொள்கின்றனர்.
மாநிலத்தில் பூஜ்ய மேம்பாடு நடந்துள்ளது என்று நாங்கள் கூறவில்லை; அக்கட்சியினரே கூறுகின்றனர். அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே, பேலுார் கோபாலகிருஷ்ணா, என்.ஒய்.
கோபாலகிருஷ்ணா ஆகியோர் அவர்களின் தொகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகள், மாநில தலைவராக விஜயேந்திரா தொடருவார். இந்த மூன்று ஆண்டுகளில் யாருடைய அதிகாரமும் பறிக்கப்படவில்லை.
மாநில தலைவர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது உண்மை தான். ஆனால், கட்சி மேலிடம் வேறொருவரை நியமித்துள்ளது. அது முடிந்து போன அத்தியாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.