ஜி.பி.ஏ., தேர்தல் நெருங்குவதால் 'மாஜி' கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
ஜி.பி.ஏ., தேர்தல் நெருங்குவதால் 'மாஜி' கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
ADDED : மே 11, 2026 11:12 PM
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு, தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகிறது. மற்றொரு பக்கம் வாக்காளர்களின் ஆதரவு கிடைக்குமா என, முன்னாள் கவுன்சிலர்கள் 'டென்ஷனில்' உள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், ஜி.பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகிறது. ஏற்கனவே ஜி.பி.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளது.
வாட்டும் கவலை இத்தனை ஆண்டுகளாக பதவி, அதிகாரம் இல்லாமல் பரிதவித்த முன்னாள் கவுன்சிலர்கள், உற்சாகத்துடன் அந்தந்த கட்சிகளில் 'சீட்' பெறும் முயற்சியில் உள்ளனர்.
இவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா, ஆறு ஆண்டுக்கு பின் நடக்கும் தேர்தலில், மக்கள் முன் வந்து ஓட்டு போடுவரா என்ற கவலை வாட்டுகிறது.
முன்னாள் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, புதிய தலைமுறையினரும் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரில் பல பிரச்னைகள் உள்ளன. ஒரே மழை நகரை புரட்டி போட்டது. சாலைகளில் பள்ளங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளன. மழைக்காலம் நெருங்கும் நிலையிலும், மழை நீர்க்கால்வாய்கள், சாக்கடைகளில் அடைப்பை சரி செய்யும் பணி நடக்கவில்லை. குப்பை பிரச்னையும் அதிகம் உள்ளது.
மாநகராட்சி மீது மக்கள் எரிச்சலில் உள்ளனர். இச்சூழ்நிலையில் ஜி.பி.ஏ., வுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற, என்ன செய்யலாம் என, மாஜி கவுன்சிலர்கள் யோசிக்கின்றனர்; தேர்தலுக்கு தயாராகின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக, வெறிச்சோடி காணப்பட்ட வார்டு அலுவலகங்கள், தற்போது களை கட்டியுள்ளன. முன்னாள் கவுன்சிலர்கள், தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
2028 பொது தேர்தல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, ஜி.பி.ஏ., தேர்தல், அக்னி பரீட்சையாக இருக்கும். அரசுக்கு மூன்று ஆண்டு நிறைவடையும் அதே நேரத்தில், தேர்தல் நடக்கவுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் கை கொடுக்கும் என, அரசு நம்புகிறது.
இந்த தேர்தல் முடிவு, 2028ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு எதிரொலியாக இருக்கும்.
பா.ஜ.,வுக்கும் ஜி.பி.ஏ., தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே, நேரடி போட்டி நடப்பது வழக்கம்.
ஆனால் இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளை எதிர்கொள்வது, காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
இதே காரணத்தால் தற்போதைக்கு, ஜி.பி.ஏ., தேர்தலை நடத்துவதில், பா.ஜ., காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.
