/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முன்னாள் தாதா முத்தப்பா ராய் மகன் மீது துப்பாக்கிச் சூடு!: குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை
/
முன்னாள் தாதா முத்தப்பா ராய் மகன் மீது துப்பாக்கிச் சூடு!: குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை
முன்னாள் தாதா முத்தப்பா ராய் மகன் மீது துப்பாக்கிச் சூடு!: குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை
முன்னாள் தாதா முத்தப்பா ராய் மகன் மீது துப்பாக்கிச் சூடு!: குடும்ப பிரச்னையா என போலீசார் விசாரணை
ADDED : ஏப் 19, 2025 11:09 PM

ராம்நகர்: நிழல் உலக தாதாவான மறைந்த முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் பயணம் செய்த கார் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூக்கு, கையில் பலத்த காயத்துடன் ரிக்கி ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தப்பா ராயின் இரண்டாவது மனைவி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு!
தட்சிண கன்னடாவின் புத்துாரைச் சேர்ந்தவர் முத்தப்பா ராய். 1980களில் பிரபல நிழல் உலக தாதாவாக வலம் வந்தார். அந்த காலகட்டத்தில் முத்தப்பா ராய் பெயரை கேட்டாலே கர்நாடகா அதிரும்.
தாதாவாக இருந்தது மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களை செய்து, தொழிலதிபர் என்ற பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அதன் பின் மனம் திருந்தி தாதா தொழிலை கைவிட்டார்.
'ஜெய கர்நாடகா' என்ற கன்னட அமைப்பை நிறுவி, மக்களுக்கு உதவியும் செய்தார். முத்தப்பா ராயின் முதல் மனைவி ரேகா ராய் 2013ல் உடல்நலக்குறைவால் இறந்தார். முத்தப்பா - ரேகா தம்பதிக்கு ரிக்கி ராய், ராக்கி ராய் என்று இரு மகன்கள்.
முதல் மனைவி இறந்த பின், 2016ல் அனுராதா என்பவரை முத்தப்பா திருமணம் செய்தார். 2020ம் ஆண்டு மே 15ம் முத்தப்பா ராயும் இறந்தார்.
குண்டு துளைப்பு
அதன் பின் அவரது மகன்கள் ரிக்கி, ராக்கி வெளிநாடுகளுக்கு சென்றனர். ரிக்கி ரஷ்யா சென்று அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
ரஷ்யாவில் இருந்தபடியே, பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், ரஷ்யாவில் இருந்து பெங்களூரு வந்திருந்தார்.
ராம்நகர் பிடதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து காரில், ரிக்கி ராய் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பெங்களூரு புறப்பட்டார். பாதுகாவலர் ராஜ்பால் என்பவரும் உடன் இருந்தார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார்.
வீட்டின் அருகே வைத்து கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டனர். ஒரு குண்டு காரின் சீட்டையும், இன்னொரு குண்டு காரின் கதவையும் துளைத்தது.
மூக்கு உடைந்தது
சுதாரித்துக் கொண்ட டிரைவர் பசவராஜ், காரை வேகமாக திருப்பியதில் கதவில் மோதி ரிக்கி ராயின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது இடது கை பகுதியிலும் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட பண்ணை வீட்டின் ஊழியர்கள் வெளியே வந்து, காருக்குள் இருந்த ரிக்கி ராயை மீட்டு சிகிச்சைக்காக, பிடதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார் டிரைவர் பசவராஜும் காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், ராம்நகர் போலீஸ் எஸ்.பி., சீனிவாசகவுடா, பிடதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடய அறிவியல் நிபுணர்களும் வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, சிறிது துாரம் மோப்பம் பிடித்து நாய் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
காரில் துளைத்த இரண்டு குண்டுகளை, தடய அறிவியல் நிபுணர்கள் வெளியே எடுத்தனர். இதற்கிடையில் பிடதி போலீசார், டிரைவர் பசவராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
போலீசாரிடம் அவர் கூறியதாவது:
சதாசிவநகர் வீட்டில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, பிடதி பண்ணை வீட்டிற்கு இரவு 7:00 மணிக்கு சென்றோம். அங்கிருந்து இரவு 11:00 மணிக்கு பெங்களூரு புறப்பட்டோம்.
வீட்டில் இருந்து சிறிது துாரம் வந்ததும் காரில் ஏதோ சத்தம் கேட்டது. காரை நிறுத்தி டயர் பஞ்சராகி உள்ளதா என்று பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டு பிடதி ரயில்வே கிராசிங் பகுதிக்கு வந்தபோது, பணப்பையை பண்ணை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதாக ரிக்கி கூறினார். இதனால் வீட்டிற்கு சென்றோம். சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு அதிகாலை 1:00 மணிக்கு புறப்பட்டோம்.
குண்டு துளைப்பு
வீட்டின் காம்பவுண்டில் இருந்து வெளியே வந்ததும், காரை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வந்தன. சுதாரித்துக் கொண்டு காரை திருப்பினேன். ஆனாலும் சீட், கதவில் குண்டுகள் துளைத்தன.
காரின் கதவில் மூக்கு இடித்து ரிக்கிக்கு ரத்தம் வந்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். வழக்கமாக ரிக்கி தான் கார் ஓட்டுவார்.
ரிக்கியை சுட்டுக் கொல்லும் முயற்சி நடந்துள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர், அடிக்கடி எங்களிடம் கூறி வந்தார். அவரும் எச்சரிக்கையாக இருந்தார்.
வழக்குப்பதிவு
துப்பாக்கிச் சூடு நடந்ததில், முத்தப்பா ராயின் இரண்டாவது மனைவி அனுராதா, முத்தப்பா ராயின் நெருங்கிய கூட்டாளி ராகேஷ் மல்லி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிதேஷ், வைத்தியநாதன் மீது சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதன்படி நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராம்நகர் எஸ்.பி., சீனிவாச கவுடா அளித்த பேட்டியில், ''ரிக்கி ராயை சுட்டுக் கொல்ல முயன்றது பற்றி, மாகடி, பிடதி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. கார் டிரைவர் அளித்த புகாரில் முத்தப்பா ராயின் 2வது மனைவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதுவரை நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை.
''ரிக்கி ராயிடமும் விசாரித்து தகவல் பெறுவோம். காரின் சீட், கதவை துளைத்த இரண்டு 70 எம்.எம்., புல்லட்டுகள்; ஒரு கீ பெட் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.