/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணிபுரிந்த வங்கியிலேயே 'மாஜி' ஊழியர் தற்கொலை
/
பணிபுரிந்த வங்கியிலேயே 'மாஜி' ஊழியர் தற்கொலை
ADDED : ஜூன் 26, 2025 11:07 PM

மங்களூரு: தான் பணியாற்றிய வங்கியிலேயே, ஓய்வு பெற்ற ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் அளகே கிராமத்தில் வசித்தவர் கிரிதர் யாதவ், 60. இவர் கொடியாளபைலுவில் உள்ள வங்கி ஒன்றில், அட்டெண்டராக பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன்பு, பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்னரும், அவ்வப்போது வங்கிக்கு வந்து, ஊழியர்களுடன் பேசி பொழுது போக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அதே போன்று, நேற்று முன் தினம் வங்கிக்கு வந்தார். கழிப்பறைக்கு சென்ற அவர், ஸ்டோர் ரூமில் பதுங்கிக் கொண்டார்.
இதையறியாமல் மாலை ஊழியர்கள் வங்கியை பூட்டிச் சென்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவோ நேற்று அதிகாலையோ, கிரிதர் யாதவ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வங்கிக்கு சென்ற கணவர், வீடு திரும்பாததால், கலக்கமடைந்த கிரிதர் யாதவின் மனைவி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அவரை தேடி வந்தனர்.
நேற்று காலை பணிக்கு வந்த வங்கி ஊழியர், ஸ்டோர் ரூமை திறந்து பார்த்தபோது, கிரிதர் யாதவ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த துறைமுக போலீசார், அவரது உடலை மீட்டு, விசாரணையை துவக்கினர்.
கிரிதர் யாதவ், சில ஆண்டுகளாகவே உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதே காரணத்தால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.