/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இயற்கை விவசாயியான முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி
/
இயற்கை விவசாயியான முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி
ADDED : செப் 07, 2025 02:36 AM

விவசாயியான தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை கவனித்துக் கொண்டு, கர்நாடகத்தில் முதன் முறையாக இயற்கை முறையில் பேரீச்சம் பழத்தை விளைவித்துள்ளார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி.
பெங்களூரு ரூரல் மாவட்டம் பேகூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் திவாகர் சன்னப்பா, 46.
விஞ்ஞானியாக இருந்து விவசாயியாக மாறியது குறித்து அவரே கூறியதாவது:
பெங்களூரு விரிவடைய துவங்கியதால், எங்கள் கிராமம், நகரமானது. இதன் விளைவாக, விவசாயம் எங்களுக்கு லாபமற்றதாக மாறியது.
விவசாயத்தை தொடர, என் தந்தை நகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில் நிலம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறந்த கல்விக்கு பெங்களூருக்கு செல்ல வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். இதனால், எங்களை நிலத்தை பார்க்க, ஒரு முறைகூட அனுமதிக்கவில்லை.
தந்தையின் விருப்பப்படி, நன்றாக படித்து, இஸ்ரோவில் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். 2009ல் என் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், முடங்கினார். அவரை கவனித்துக் கொள்வதற்காக, கிராமத்திற்கு குடிபெயர்ந்தேன்.
என் தந்தையை கவனித்துக் கொண்டு கிராமத்தில் ஓராண்டு இருந்ததால், நகர வாழ்க்கை பிடிக்காமல் போனது. அதேநேரத்தில், ஜப்பானிய விவசாயி மசனோபு புகுவோகாவின் 'ஒரு வைக்கோல் புரட்சி' என்ற புத்தகத்தை படிக்க துவங்கினேன். புத்தகம் படிக்க துவங்கி நான்காவது நாளில், எங்கள் நிலத்துக்கு சென்று பார்வையிட தைரியம் ஏற்பட்டது.
அதன் பின் நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் மற்ற விவசாயிகள் போன்றே, 2.5 ஏக்கர் நிலத்தில், தினை, துவரம் பருப்பு, மக்காசோளம் பயிர்களை பயிரிட்டேன். இதற்காக 22 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, 33 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
அதன் பின்னரே, விவசாயத்தில் புதுமையை கையாள தோன்றியது. எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட பாலைவனங்களில் மட்டுமே விளையும் பேரீச்சம்பழத்தை, கர்நாடகாவில் முதன்முறையாக பயிரிட்டேன். தற்போது ஏக்கருக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.
பேரீச்சம்பழ சாகுபடியை மேற்கொள்வதற்கு முன்பு, பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய மேளாவில் தமிழத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை சந்தித்தேன். அவர், பேரீச்சம்பழத்தை எப்படி விவசாயம் செய்வது என்ற குறிப்பு அடங்கிய துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் அவரை கேலி செய்தேன். ஆனால், அவர் கூறிய தகவல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேரீச்சம்பழத்தை விளைவிக்க முடிவு செய்து, தமிழகத்தை சேர்ந்த விவசாயியை, ஆறு மாதங்கள் தேடி கண்டுபிடித்தேன். அவரது நிலத்தில் பேரீச்சம்பழத்தை பயிரிட்டிருந்ததை பார்த்தேன். என் கிராமத்தின் தட்பவெப்ப நிலை ஓரளவுக்கு ஒத்திருந்ததால், நானும் பேரீச்சம்பழங்களை பயிரிட முடிவு செய்தேன்.
ஒரு மரக்கன்று 3,000 ரூபாய் வீதம், 150 மரங்களை வாங்கி வந்து விளைவித்தேன். இன்று ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
இஸ்ரோவில் பேராசிரியராக பணியாற்றி வருவதால், தனது மகளை திருமணம் செய்து வைத்த மாமியாரால், நான் விவசாயம் செய்வதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், அதை பற்றி கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -